நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் செயற்படுபவர்களை கட்டுப்படுத்தும் உரிமை அரசிடம் உண்டு

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்
49Shares

நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் வெறித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களை கட்டுப்படுத்தும் உரிமை அரசிடம் உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வன்மையாக கண்டித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவு திட்டத்திற்கான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த மதம் எந்தவிதத்திலும் குறைவானதில்லை. தனித்துவமும் புனிதத்துவமும் கொண்டதே இந்த பௌத்த மதம்.

சினத்தின் உச்சமாக வாழ்ந்த அசோக மன்னுக்கு ஒழுக்க நெறியை போதித்தது இந்த பௌத்த மதம். ஆனால் பெருமை மிக்க இந்த பௌத்த மத்தில் இருந்து கொண்டு பல நாசகார வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு பௌத்த மதத்திற்கும் பௌத்தர்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி கொண்டு மதவெறியுடன் பல செயற்பாடுகளை செய்து வருபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை வாழைச்சேனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் யுத்தத்தின் போது பாதிப்பிற்குள்ளான தேவாலயங்கள் இன்னமும் அவ்வாறான நிலையிலேயே உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவர்களது கவலைக்கு விடை கிடைக்க வேண்டும். தேவாலயங்கள் அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு விடப்பட வேண்டும்.

அத்துடன் சுற்றுலாத்துறையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் போது எமது பாரம்பரிய ஒழுக்கத்தை சிதைக்காத விதத்தில் அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

உதாரணமாக பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள உணவகச்சாலைகளில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாதது அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேதனையை அளித்துள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேலும், 21ஆம் நூற்றாண்டு தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம். ஆனால் இலங்கையில் கஷ்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்னமும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டு வளர்ச்சியையே கண்டிருக்கிறார்கள்.

அதனால் இவ்வாறான பகுதிகளை இனங்கண்டு தபால் வசதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் இதன் போது தெரிவித்தார்.

Comments