நாமல் எங்கே? மகிந்த எங்கே? தேடிய பிரதமர்..! - வெகுண்ட உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்..!

Report Print Mawali Analan in பாராளுமன்றம்

ஹம்பாந்தோட்டைக்கு வர்த்தக மையம் தேவையில்லை என்றால் சொல்லிவிடுங்கள் ஏனைய மாவட்டங்களுக்கு கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் அங்கே அமைத்துக் கொடுக்கின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.

வருடத்திற்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம் பெற்றது. முதல் நாளே சர்ச்சைக்குரிய அமளி துமளியான இடமாக மாறிப்போனது பாராளுமன்றம்.

அங்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஹம்பாந்தோட்டைக்கு வர்த்தக வலயம் அவசியம் இல்லையா? நாமல் எங்கே? மகிந்த எங்கே? அவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம்? ஏன் உங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லையா எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதில் வழங்கிய போது,

நீங்கள் எங்களிடம் பெற்றுக் கொண்ட இடங்களில் வர்த்தக மையத்தினை அமைத்துக் கொள்ளுங்கள் 15000 ஏக்கர் இடத்தினை எடுக்க வேண்டாம்.

அதனை ஏனைய மாவட்டங்களுக்கு பிரித்து அமைத்துக் கொடுங்கள். அபிவிருத்திக்கு எந்த விதமான ஆட்சேபனையையும் நாம் தெரிவிக்க வில்லை என பதில் அளித்தார்.

இதன்போது குறுக்கிட்டு எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கும் போது,

ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை சீன ஆதிக்கத்திடம் ராஜபக்சர்கள் கொடுத்து விடுவார்கள் என்று கூறியவர்களே இப்போது சீனாவிடம் கைகோர்த்துள்ளார்கள்.

மேலும் அவர்கள் தேசத்தின் சொத்தான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நீச்சல் தடாகம் என வர்ணித்தவர்களே இப்போது அதனை மீட்க எடுத்த போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் என விமல் குற்றம் சுமத்தினார்.

அவருடைய குற்றச்சாட்டுக்கு வெகுண்ட அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல ஆசனத்தை விட்டு எழுந்து,

அங்கு நடைபெற்றது தாக்குதல் ஒன்றும் அல்ல நீதி மன்ற உத்தரவை மீறியதாலேயே, மேலும் போராட்டங்கள் நடத்தக் கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

அந்த உத்தரவை மீறி பாராளுமன்ற உறுப்பினர்களே வீதியில் இறங்கி போராட்டத்தை நடத்தினீர்கள் நீங்கள் அனைவரும் வீதியில் நின்றவர்களே. நீதிமன்ற உத்தரவை மீறாவிட்டால் இது நடைபெற்றிருக்காது என்பதனை நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.

அவரைத் தொடர்ந்து விமல் கூச்சலுடன் ஆசனத்தை விட்டு எழுந்து,

சீனாவில் கொடுக்கப்பட உள்ளது கொழும்பைப் போன்று 3 அளவு பெரிய இடமாகும். அங்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ளப்போவது இலங்கையர் அல்ல. சீனாவினர் சும்மா வரமாட்டார்கள் கூட்டமாகவே வருவார்கள்.

சீன நாட்டவருக்கு மட்டுமே அங்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் மொத்தத்தில் நாடு சந்திக்கப்போவது பேராபத்தை மட்டுமே என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் விமல் ஆவேசமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நாமல் தன் பங்கிற்கு,

நீதிமன்ற உத்தரவை நீக்கிக் கொள்கின்றோம் பிக்குகளுக்கு அம்பாந்தோட்டை நிகழ்வுக்கு வருகைத் தர அனுமதி கொடுக்கப்படும் என பிரதமர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன.

அதேபோன்று கொழும்பில் இருந்து வந்த ரவுடிக் கும்பல் மூலமாகவே பல தாக்குதல்கள் நடைபெற்றன இதற்கு முறையான விசாரணைகள் எடுக்க வேண்டும் எனவும் நாமல் தெரிவித்தார்.

இவ்வாறாக ஹம்பாந்தோட்டை சம்பவம் காரணமாக பாராளுமன்றம் குழப்பங்களும், கூச்சலுமாக மாறிப்போனது. சபாநாயகர் இருக்கும் போதே அனைவரும் கூச்சலிட்டு மாறி மாறி திட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து கேலி கோஷங்களையும் எழுப்பி பாராளுமன்றத்தை சந்தைக்கு ஒப்பானதாக மாற்றியமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Comments