தமிழர்கள் வேண்டும் என்று ஆயுதம் ஏந்தவில்லை! காரணம் இதுதான்

Report Print Murali Murali in பாராளுமன்றம்

தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு போராட்டங்களை நடத்தியிருந்தனர். அறவழி போராட்டத்தில் ஆரம்பித்து பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு சென்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலைக்கு பின்னர் தமிழர்கள் வேண்டுமென்று ஆயுதம் ஏந்தவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் சுட்டிக்காட்டியிருந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒரு சமூகம் இன்னொரு சமூகம் மீது தனக்கு நிகராக மதிக்காமை, அதிகாரங்களை பகிர்ந்தளிக்காமை போன்ற காரணங்களினாலேயே தமிழர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இதனை நாங்கள் கொண்டு செல்லக்கூடாது. அண்மையில் கேகாலையில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.

இதன் போது அங்கு சென்று இரண்டு நாட்கள் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். இதன் போது பாடசாலை பலவற்றுக்கும் சென்றிருந்தோம்.

இவ்வாறான நிலையில் சிங்களப் பாடசாலை ஒன்றுக்கு சென்று, நான் என்னை அறிமுக்கப்படுத்திய போது, அங்கிருந்த மாணவர்கள் என்னை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்தார்கள்.

இந்நிலையில் எங்களது நிலைப்பாட்டை அந்த மாணவர்களுக்கு எடுத்து கூறியிருந்தேன். அதன் பின்னர் அவர்கள் எங்களை மிகவும் அன்பாக உபசரித்தார்கள்.

இவ்வறான ஒரு நிலையே நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு இனவாதத்தினையும், மதவாதத்தினையும் நாங்கள் கொண்டு செல்ல முடியாது.

இதேவேளை, நாட்டில் சிறுபான்மையின மக்களை பெரும்பான்மையின மக்கள் எந்தளவு மதிக்கின்றார்கள் என்பதைக்கொண்டே அவர்களின் மிகப்பெரிய கௌரவம் தங்கியிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.