பந்துல, தயா கமகே மற்றும் அஜித் பீ. பெரேராவுக்கு இடையில் சூடான வாக்குவாதம்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

நாடாளுமன்றம் தவறாக வழிநடத்தப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தினார்.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கேள்வியை எழுப்பும் போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது சபையில் இருத்தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தை ஆய்வு செய்ய மனோ தித்தவெல்ல தலைமையில் தனியான குழு அமைக்கப்பட்டுள்ளது.


மனோ தித்தவெல்ல என்பவர் யார் அரச அதிகாரியா, அரச ஊழியரா? இவை எப்படி நடக்க முடியும் என்பது குறித்து நாடு கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் துறையை சேர்ந்த மனோ தித்தவெல்ல வரவு செலவுத் திட்டத்தை பின்னறிவிப்பு செய்யும் குழுவின் தலைவராக இருக்கின்றார்.

மனோ தித்தவெல்ல யார் நிதியமைச்சின் நிரந்தர செயலாளரா, வெளிநாட்டவர்களை நியமிக்கின்றனர். அவர்கள் கொள்ளையடிக்கின்றனர். பின்னர் தப்பிச் செல்கின்றனர் என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தயா கமகே,

சபாநாயகர் அவர்களே இது முற்றாக சபையை தவறாக வழிநடத்தும் பேச்சு. வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை நாங்கள் கடந்த அரசாங்கத்தை போல் வீண் விரயம் செய்ய மாட்டோம்.

கடந்த அரசாங்கத்தில் வரவு செலவுத்திட்டத்திற்கு 400 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. அவற்றில் கடந்த அரசாங்கம் 325 பில்லியன் ரூபாவை மாத்திரமே செலவு செய்தது.

கடந்த அரசாங்கம் 350 பில்லியனை செலவு செய்த போதிலும் நாங்கள் வரவு செலவுத்திட்டத்தில் 780 பில்லியனை ஒதுக்கியுள்ளோம்.

உண்மையில் அரச கட்டமைப்பின் கொள்ளவை நாம் அதிகரிக்க வேண்டும் இல்லையென்றால் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட முடியாது போகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவதிலும் உண்மை உள்ளது. அரச கட்டமைப்பை எம்மால் வலுப்படுத்த முடியாது போனால் எம்மால் இதனை செலவு செய்ய முடியாது.

இதனால் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்த நிதியமைச்சரை திட்டி பயனில்லை என தயா கமகே தெரிவித்தார்.

இதன் போது நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வி ஒன்றை முன்வைக்க முயற்சித்தார்.

நாடாளுமன்றத்தில் இப்படி பணியாற்ற முடியாது என்று நாங்கள் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளரிடமும் முறைப்பாடு செய்தோம்.

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துவது குறித்து நீங்கள் ( சபாநாயகர்) விசாரணை நடத்தினீர்கள்.

கூட்டு எதிர்க்கட்சியினரான நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து, சபாநாயகரிடம் முறைப்பாடும் செய்தோம் அப்படி இருக்கும் போது நாடாளுமன்றத்தை தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் கூறுகிறார்.

தற்போது இந்த இடத்தில் இருந்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இதன் போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா,

இப்படி பேச முடியுமா? அதற்கு இருக்கும் உரிமை என்ன?. நீங்கள் முதலில் நாடாளுமன்றத்திற்கு வந்தவர் என்றால், நீங்கள் செய்யும் வேலை என்ன?.

செய்யும் வேலை சரியானதா?. இது என்ன நிலையியல் கட்டளை?இந்த பண்டித தனத்தை மாற்றிக்கொள்ளுங்கள். கேள்வியை கேட்டீர்கள். பதிலளிக்கப்பட்டது உட்காருங்கள்.

நீங்கள் செய்வதில் என்ன அர்த்தம். சபாநாயகர் அவர்களே இவர் முக்கியமானவரா?. இவர் புதுமையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவரா?.

தவறாக வழிநடத்தப்பட்டதோ இல்லையோ, கேள்வி கேட்க முறையொன்று உள்ளது. அதற்கு அமைய வேலை செய்யுங்கள் என்றார்.