உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது

Report Print Gokulan Gokulan in பாராளுமன்றம்

யுத்தத்தின் போது நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டோர் ஆற்றுப்படுத்தப்படல் முக்கியமான போதும், அது நடந்தேறாத நிலையில் அதன் வடுக்கள் வலித்துக் கொண்டிருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த வலியினை எமது மக்கள் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளை எமது மக்கள் நினைவு கூறுகின்றார்கள். இந்த நிகழ்வு வடக்கிலும், தெற்கிலும் சில அரசியல்வாதிகளின் சுயலாபம் கருதி அரசியலாக்கப்படுகின்றது.

உறவுகளை பலிகொடுத்த எமது மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற, கல்லறைகள் தவிர்ந்த ஒரு வெற்று வெளியில் எமது மக்கள் தங்களது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கின்றனர்.

இதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தும் படியும், பொது நினைவுத்தூபி ஒன்றை அமைக்கும் படியும் நான் இந்தச் சபையிலே தனிநபர் பிரேரணையொன்று கொண்டு வந்திருந்தேன்.

அதற்கான அங்கீகாரம் கிடைத்தது. அந்த அங்கீகாரம் செயல்வடிவம் பெறும் வரையில் எமது மக்களுக்கு தங்களது உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்.

அதற்கு எவரும் தடையாகவோ, இடையூறாகவோ இருக்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன் என கோரியுள்ளார்.