மகாவலி பட்டினி ஒழிப்புத்திட்டம் தமிழர்களின் காணி பறிப்பு திட்டமாகியது ஏன்?

Report Print Sumi in பாராளுமன்றம்

மகாவலி பட்டினி ஒழிப்புத் திட்டம் தமிழர்களின் காணி பறிப்பு திட்டமாகியது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது இவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மகாவலி கருத்திட்டம் என்பது ஒரு பட்டினி ஒழிப்புத் திட்டமாக உருவாக்கப்பட்டது. UNDPயினது Food and Agriculture Organization இன் ஆலோசனை, அனுசரணையின் கீழ் உருவாக்கப்பட்டது.

இதன் ஆரம்ப கருத்திட்டம் 9 இலட்சம் ஏக்கர் நீர்ப்பாசனத்துக்காகவும், நீர் மின்வலு மின்சாரத்துக்காகவும் உருவாக்கப்பட்டது. 03 துணைக் கருத்திட்டங்களாக 30 வருடங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்தது.

1970ஆம் ஆண்டு இலங்கையின் பிரதம மந்திரி டட்லி சேனாநாயக்கவால் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1970இன் பொதுத்தேர்தலில் UNP அரசு தனது ஆட்சியை இழந்ததால் இந்த திட்டம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களின் பொறுப்பின் கீழ் வந்தது.

அவரது காலத்தில் வடக்கிற்கும் நீர் வந்தது. மண்ணாகண்டல் என்ற பிரதேசம் புதுக்குடியிருப்பு நகரத்தின் அண்மையில் அமைந்த ஒரு இடம். இந்தப் பிரதேசத்தில் முத்தையன்கட்டுக் குளத்தின் ஊடாக மகாவலி நீர் வழங்கல் செய்யப்பட்டது.

இந்த தண்ணீர் வழங்கல் மூலம் அந்தப் பிரதேச விவசாயிகள் நெல், மிளகாய் போன்ற பயிர் செய்கைகளை செய்வதன் மூலம் பாரிய இலாபங்களைப் பெற்றனர். இதன் மூலம் தான் அவர்கள் வாகனங்களைக் கொள்வனவு செய்து சிறப்புற வாழ்ந்தனர்.

அத்தோடு படித்த வாலிபர் திட்டம் (Land Army) என்ற திட்டத்தின் ஊடாக தமிழ் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டு முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டது.

இது பிரபாகரனின் காலத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு திட்டமாக இருந்தது. இந்த திட்டம் பின்னர் தடைப்பட்டது. இதனால் இளைஞர்கள் கொந்தழித்தார்கள்.

1983ம் ஆண்டு கொடூர யுத்தம் ஆரம்பமாகியது. இராணுவத்தினால் கட்டளையிடப்பட்டு மணலாறு பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதுடன், இந்த பிரதேசம் சூனியப் பிரதேசமாகியது.

இதன் காரணமாக சிங்களக் குடியேற்றங்கள் 1984ம் ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. மகாவலித் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளும் இனமோதல்களுக்கு ஒரு காரணமாகியது. மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெளிஓயா ஆகியது.

முத்தையன்கட்டுக்கு வந்த நீர் மணலாறுக்கு திருப்பப்பட்டது. இனவாதம் மக்களிடம் விதைக்கப்பட்டது. சிங்களக் குடியேற்றங்கள் வெளிஓயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.