பேருந்துகளின் தடங்களைக் கூட காணாத அவல நிலையில் கிளிநொச்சி மக்கள்

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

336 கிராமங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 186 கிராமங்களில் பேருந்துகளின் தடங்களைக் கூட காணாத மக்கள் வாழ்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

போக்குவரத்து ஒரு நாட்டினுடைய மிக பிரதானமான விடயமாக பார்க்கப்படுகின்றது. போக்குவரத்தினுடைய இயலுமை என்பது அந்த நாட்டினுடைய பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்நிலையில், கிளிநொச்சி அரச பேருந்து டிப்போ இன்னுமே புணரமைக்கப்படாத ஒரு சூழலில் காணப்படுகின்றது.

இதுவரையில் 14 பேருந்துகள் மாத்திரமே கிளிநொச்சி மாவட்டத்தில் சேவையில் ஈடுபடக்கூடிய நிலையில் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டம் 336 கிராமங்களைக் கொண்ட ஒரு மாவட்டம், இந்த 336 கிராமங்களைக் கொண்ட மாவட்டத்தில் இதுவரை 186 கிராமங்களில் பேருந்துகளின் தடங்களைக் கூட காணாத மக்கள் உள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலைமையில் இலாபத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பேருந்து சேவை நடத்தப்படுமாக இருந்தால் அது அந்த மக்களுக்கான சரியான போக்குவரத்தினை அளிக்குமா என்பதை நாங்கள் எங்களிடமே கேட்கவேண்டும்.

இ.போ.சபை வளர வேண்டும் என்றால் தனியாரோடு போட்டிப்போட வேண்டும் என்ற நியதிகள் இருக்கின்றன. ஆனால் அவ்வாறானதொரு சூழலில் கூட மக்களுக்கு சரியான போக்குவரத்து சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.