தொடந்தும் வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றுகிறீர்கள்!

Report Print Thileepan Thileepan in பாராளுமன்றம்

மாகாண, மத்திய அரசால் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர்,

இரவு, பகலாக ஒரு வருடத்தையும் தாண்டி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். கொட்டும் பனியிலும், வெயிலிலும், மழையிலும் என சிலர் கைக் குழந்தைகளுடனும் சிலர் கர்ப்பிணி பெண்களாகவும் போராடுகின்றனர்.

பார்த்தும் பாராமலும் இந்த அரசாங்கம் செயற்படுவதனைக் கண்டிக்கின்றோம். இதன் பிரதிபலிப்புதான் இந்த அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க காரணமாகியது . வேலையற்ற பட்டதாரிகள் கூட மனதளவில் பாதிக்கப்பட்டு சிலர் தேர்தலை புறக்கணித்தனர்.

நான்கு வருடங்கள் ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டு படித்தவர்கள் பல வருடங்கள் காத்திருக்க பட்டம் பெறாதவர்கள் பலர் தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தில் அரச வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

இது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கையாகும். தயவு செய்து கஷ்டமான நிலையிலுள்ள வேலையற்ற பட்டதாரி பிள்ளைகளை ஏமாற்ற வேண்டாம் . இவ்வாறு உங்கள் நடவடிக்கைகள் செல்லுமானால் இன்னும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியே வரும்.

கிழக்கு மாகாணத்தில் சகல அரச திணைக்களங்களிலும் கிட்டத்தட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உண்டு. அவ்வாறு இருந்தும் பட்டதாரிகள் உள்வாங்கப்படாமல் மாகாண, மத்திய அரசால் பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.