தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி

Report Print Murali Murali in பாராளுமன்றம்

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஒரு சம்பவம் நீதிக்கு அப்பாற்பட்டதாக இருக்குமாயின் அதற்கான சட்டத்தைக் கொண்டுவரும்போது அது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதாக வேண்டும்.

யுத்தத்துக்குப் பின்னர் 16 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதகா பதிவுகள் காணப்படுகின்றன.

யுத்தம் போர் முடியும் தறுவாயில் இராணுவத்தினடம் சரணடைந்தவர்கள், பெற்றோர் உறவினர்கள் அவர்களை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் என பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சட்டமானது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதைக் கூறுவதற்கு முடியுமானதாக இருக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்காணப்பட வேண்டும். சென்ற ஆட்சியில் இது இடம்பெற்றிருந்தாலும் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் பட்டியல் உங்களிடம் இருக்கிறதா? இல்லையா? இதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி நியமித்துள்ள குழு விசாரணைகளை நடத்த வேண்டும். பொது மக்கள் கொல்லப்பட்டார்களா இல்லையா. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.