இரணைதீவு விவகாரம்: அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Murali Murali in பாராளுமன்றம்

இரணைதீவில் மீளக்குடியமர்த்துமாறு கோரி போராடி வருபவர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்றும் அரசு தெரிவித்தது.

இரணைதீவு மக்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வியெழுப்பினார்.

பாதுகாப்பு அமைச்சு சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக இதற்கு பதில் வழங்கினார். அந்தப் பதிலிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரணைதீவில் குடியிருந்த 190 குடும்பங்கள் 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூநகரியின் முளங்காவில், இணைமாதா நகர் உள்ளிட்ட கிராமங்களில் குடியமர்ந்தனர்.

இவ்வாறு மீள்குடியமர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 297 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடியை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இவர்கள் இரணைதீவுக்குச் சென்று தற்காலிகமாக தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

தற்பொழுது தற்காலிகமாகத் தங்கியிருந்து போராடிவருபவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழுவொன்று 15ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி இரணைதீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் எந்தவொரு தனியார் காணிகளையும் கையகப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்க காணிகளிலேயே இருக்கின்றனர்.

ஆறு ஏக்கரும் 53 ஹெக்டெயர் நிலப்பரப்பிலேயே கடற்படையினர் இருக்கின்றனர். இந்தக் காணிகள் காணி ஆணையாளரின் ஊடாக பெறப்பட்டுள்ளன. இரணைதீவில் உள்ள அரசாங்க காணிகள் மற்றும் தனியார் காணிகளை அளவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தக் காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதில் தனியார் காணிகள் இருந்தால் அவற்றை அனுமதியுடையவர்களுக்கு வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டார்.