ஜனாதிபதியின் கதையால் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுப் போனது

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முந்திரி பருப்பு கதையால், ஸ்ரீலங்கன் விமான சேவையின் நற்பெயர் முழுமையாக கெட்டுப் போனதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து சட்டமூல வரைவு மற்றும் விமான சேவைகள் சட்டமூலத்தின் கீழ் உள்ள கட்டளைகள் தொடர்பிலான இரண்டாம் முறை வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ உணவு, பானங்களில் குறைப்பாடுகளை வைத்திருப்பது முக்கியமல்ல. மதிக்கத்தக்க நபர் உணவில் இருக்கும் குறைப்பற்றி இப்படி பேச மாட்டார்.

ஜனாதிபதியின் இந்த கதையின் பின்னர், ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை பழுதான முந்திரி பருப்பை வழங்கியுள்ளதாக உலகம் முழுவதும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.

ஜனாதிபதியின் இந்த கதையால் விமான நிறுவனத்தின் பெயர் கெட்டுப் போனது” என்றார். எது எவ்வாறாயினும் இலங்கையின் ஜனாதிபதி, நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் பிரதான செயல் அதிகாரியாக கருதப்படுகிறார்.

தனக்கு கீழ் உள்ள அரச நிறுவனங்களில் குறைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட முகாமைத்துவத்தை அழைத்து, குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

எனினும் ஜனாதிபதி அதனை விடுத்து, பகிரங்கமான முறையில் குறையை சுட்டிக்காட்டியமையானது ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சர்வதேச ரீதியான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.