முழு ஆதரவுடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Report Print Rakesh in பாராளுமன்றம்

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’(மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு தடையாக இருந்த சரத்துகளை நீக்குவதற்குரிய சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்திலுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிப்படுத்தல்.

பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச் செய்முறைக்குப் பங்களிப்பதை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்கு ஊக்கமளித்தல்.

அதிகார சபையானது, இந்தச் சட்டத்தின் கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரச திணைக்களம், உள்ளூர் அதிகார சபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன்படிக்கைகளை செய்துகொள்ளுதல்.

இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக் கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின் கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.

அதிகார சபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.

அதிகார சபையின் பணிகள்

  1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும், கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.
  2. அதிகார சபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
  3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரச திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும், கருத்திட்டங்களையும் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமுதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
  4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தல்.
  5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்.