மஹிந்த அணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இழப்பீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்!

Report Print Rakesh in பாராளுமன்றம்

இழப்பீட்டுச் சட்டமூலமானது பொது எதிரணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் நாடாளுமன்றத்தில் இன்று 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக 59 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மஹிந்த அணியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.

ஆளும், எதிரணி உறுப்பினர்கள் உரையாற்றி முடித்த பின்னர் மாலை 6.25 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. ஒரு சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவே இந்தச் சட்டமூலத்தை அரசு நிறைவேற்ற முற்படுகின்றது என பொது எதிரணியான மஹிந்த அணியின் சார்பில் உரையாற்றிய உறுப்பினர்கள் கடுமையாகச் சாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers