தீர்வு இல்லையேல் அபிவிருத்தி இல்லை! மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தப் போது அரசியல் தீர்வு தொடர்பில் கூறிய பல விடயங்களே தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்வும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, பிரிக்கப்படாத நாட்டில் அனைத்து மக்களும் அதிகாரப்பகிர்வுடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

அவரது தரப்பின் முக்கிய உறுப்பினர்களாக பசில் ராஜபக்ஷ, ஜீ.எல். பீரிஷ் உள்ளிட்டவர்களும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவரது காலத்தில் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலும் அரசியல் தீர்வு சமந்தமான பரிந்துரைகள் அதிகாரப்பகிர்வை அடிப்படையாக கொண்டனவாகவே இருந்தன.

இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.

இந்தநிலையில் விரைவாக நாட்டில் அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் இலங்கையே அவர்களது நாடு என்றும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாததுடன் உண்மையான நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers