ஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள்? சுவிஸ் இனிப்பும், மணிக்கூடும் என்பதை கூறுவார்களா

Report Print Sujitha Sri in பாராளுமன்றம்

தமிழ் தலைமைகளுக்கு ஆளுமை இருந்திருந்தால், அக்கறை இருந்திருந்தால் நான் எடுத்து கூறும் நியாயங்களுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வேலையற்ற பட்டதாரிகளின் தொகை ஆண்டு தோறும் பெருகி வருகின்றது. தொண்டர் ஆசிரியர்களின் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது. இவைகளுக்கெல்லாம் தமது அரசியல் பலத்தை வைத்து அரசுடன் அவர்கள் பேரம் பேசி அதற்கென தீர்வுகளை காண முடியவில்லை.

இந்த இலட்சனத்தில் விமானம் ஏறி ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ள ஜெனீவா சென்றுள்ளார்கள்.

வலிகளை சுமந்துள்ள எமது மக்களின் காதுகளில் பூவைத்துள்ளதன் மூலமாக இவர்களுக்கு கிடைத்திருப்பது ஜெனீவா எனும் வருடாந்த திருவிழா.

ஜெனீவாவில் இருந்து எதை கொண்டு வந்தீர்கள் என்று நாளை எமது மக்கள் கேட்பார்கள்.

அப்போது எதை கொண்டு வந்தோம் என்று எமது மக்களுக்கு நீங்கள் பதிலளிப்பீர்கள்.

சுவிஸ் நாட்டின் இனிப்பும், மணிக்கூடும் உங்கள் குடும்பங்களுக்கு மட்டும் கொண்டு வந்தீர்கள் என்பதை எமது மக்களுக்கு சொல்வீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

Latest Offers