இலங்கையின் மனித உரிமை பற்றி பிரித்தானியா எப்படி பேச முடியும்?

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

ஊவா வெல்லஸ்ஸவில் முப்பாட்டன்களை கொலை செய்த பிரித்தானியாவுக்கு இலங்கையின் மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்ப இருக்கும் உரிமை என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பேச பிரித்தானியாவுக்கு என்ன உரிமை இருக்கின்றது. ஊவா வெல்லஸ்ஸவின் எமது முப்பாட்டன்களையும், இளைஞர்களையும், குழந்தைகளையும் கொன்று எமது சொத்துக்களை அழித்த பிரித்தானியா, இலங்கையின் மனித உரிமை பற்றி எப்படி பேச முடியும்.

இலங்கையின் மனித உரிமை பற்றி பேச பிரித்தானியாவுக்கு இருக்கும் தார்மீக உரிமை என்ன?. எமது ஓலைச் சுவடிகளையும், தொல் பொருட்களையும் பிரித்தானியர் திருடிச் சென்றனர். எமது சொத்துக்கள கொள்ளையிட்டனர்.

எமது காணிகளை கொள்ளையிட்டனர். இவ்வாறு செய்த பிரித்தானியா எமக்கு மனித உரிமை பாடம் நடத்த வருகிறது. இறையாண்மையுள்ள எந்த நாடும் தனது பாதுகாப்புக்காக நடவடிக்கைகளை எடுக்கும்.

ஒரு நாட்டில் மோதல்கள் ஏற்பட்டால், அதனை அடக்க அரசியல் மற்றும் இராணுவ ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

இந்த நடவடிக்கைளின் பின்னர் அந்நாட்டுக்கு எதிராக வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்தால், அதனை தடுக்க நாட்டின் ஆட்சியாளர்கள் அக்கறை எடுத்து கொள்வார்கள்.

அரசாங்கம் மாறினாலும் அரசு மாறாது. பாதுகாப்பு படையினர் என்பவர்கள் அரச பாதுகாப்பு படையினர். அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினர் அல்ல.

வெளிவிவகார அமைச்சு என்பது அரச வெளிவிவகார அமைச்சே அன்றி அரசாங்க வெளிவிவகார அமைச்சு அல்ல எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.