அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல! ஆனால் இலக்கு வைக்கப்பட்டது..?: மாவை

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

ஈஸ்டர் தின தாக்குதலை நாங்கள் மத ரீதியாகவோ இன ரீதியாகவோ பார்க்காவிட்டாலும் அன்றைய தாக்குதல் கிறிஸ்தவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டது என்பதுதான் எமது கருத்து என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் கணிசமான காலம் 1815ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரான கலவரங்கள் ஏற்பட்ட காலங்களிலும் இந்த நாட்டில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு ஆலயமொன்றில் இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருக்கின்ற பிரபலமான ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனை நாங்கள் வண்மையாக கண்டித்திருக்கின்றோம்.

இந்த கண்டனத்தை நாங்கள் தெரிவிக்கின்ற போது ஐ.எஸ் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்பதையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் அனைவர் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே சோதனை நடவடிக்கைகளின்போது தமிழர்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி அது தவிர்த்து கொள்ளப்பட்டு சோதனை நடத்தப்படுவது நல்லது.

ஈஸ்டர் தின தாக்குதலை நாங்கள் மத ரீதியாகவோ இன ரீதியாகவோ பார்க்காவிட்டாலும் அன்றைய தாக்குதல் கிறிஸ்தவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டது என்பதுதான் எமது கருத்து.

இந்த தாக்குதல்களில் கணிசமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நான் மட்டக்களப்புக்குச் சென்ற போது அங்கு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களும் காயம் பட்டவர்களும் முழுமையாக தமிழர்களாக இருந்தார்கள்.

24ஆம் திகதி நான் மட்டக்களப்பில் இருந்தேன். 24ஆம் திகதி ஒரு துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.

அந்த வேண்டுகோளிலே நாங்கள் சொன்னது என்னவென்றால், அவசரகாலச் சட்டம், அதற்கு அடுத்தப்படியாக உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் போன்றவற்றில் தற்போது சில விதிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் சாதாரண மக்கள், அவர்களின் சுதந்திரம் அவர்களின் ஜனநாயக உரிமைகள் என்பன பாதிக்கப்பட கூடாது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

இவ்வாறான காலங்களில் எல்லாம் தமிழர்களுடைய பிரதேசங்களும் தமிழர்களும்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள் என்பதன் காரணத்தினால் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இன்றைக்கு ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ஐ.எஸ் இனுடைய நடவடிக்கைகளை முன்கூட்டியே தெரிந்திருந்ததாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்த ஆட்சியிலுள்ள பலருக்கும் தெரிவித்ததாக அறிவித்தும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்ற குற்றத்தையும் நாங்கள் சுமத்தியிருந்தோம்.

ஐ.எஸ் தீவிரவாதிகளினால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் இன்று அவர்களுடைய புலனாய்வுத் துறையினரை அனுப்பியிருக்கின்றார்கள், பல நாடுகள் நேரடியாக தலையீடு செய்திருக்கின்றன.

இந்த தாக்குதல்களில், 250 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், 500 பேரிற்கு மேல் காயமடைந்திருக்கின்றார்கள். இதற்கு மேலும் தமிழர்களுடைய இனப் போரில் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். போர் முனையில் விஷ வாயு குண்டுகள் வீசப்பட்டு பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், இப்படி பல தகவல்கள் எங்களுக்கு இருக்கின்றன.

இந்த ஈஸ்டர் தாக்குதலிலும் அதிகளவான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், இவ்வாறு இந்த நாட்டில் நடந்த பல நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அதில் அதிகளவில் தமிழர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.