புலிகளை ஆதரித்தது தமிழர்களின் மாபெரும் தவறு! ஆனால் முஸ்லிம்கள்?

Report Print Jeslin Jeslin in பாராளுமன்றம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து தமிழ்த் தலைமைகள் தவறிழைத்ததைப் போன்று தற்போது சர்வதேச பயங்கரவாதத்தை ஆதரித்து முஸ்லிம் தலைமைகள் தவறிழைத்திட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் அன்று விடுதலைப் புலிகள் உருவாகியபோது தமிழ்த் தரப்பு தலைமைகள் அதனை ஆதரித்து தவறிழைத்தன.

அதேபோல் இன்று பரவிவரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதத்தை முஸ்லிம் தலைவர்களும் ஆதரித்து விட வேண்டாம்.

இந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கும் தலைவர்களுக்கும் அதிகமாகவே உள்ளது.

அதேபோல் அரசாங்கமாக நாமும் எமது கடமை, பொறுப்புக்களை சரியாக செய்து முடிக்க வேண்டும்.

இன்று சமூக வலைத்தளங்களில் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோல் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாமே முஸ்லிம் சமூகத்தை மோதல் நிலைமைக்கு கொண்டு செல்வதாக அமைந்து விடும்.

ஆகவே இதனை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். அதேபோல் சட்டங்களைப் பொறுத்தவரை ஒரு சமூகத்திற்கு தனித்தனிச் சட்டஙகள் அவசியமில்லை.

பொதுவான சட்டங்கள் ஆரோக்கியமானதாக அமையும். இதில் சிங்கள் வழக்காற்று சட்டங்களிலும் சில குழப்பங்கள் உள்ளன.

அவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் விவகாரம் குறித்து சில இறுக்கமான சட்டங்கள் உள்ளன.

விவாகரத்து விடயங்களில் இறுக்கமான நிலைமைகள் உள்ளன. அதேபோல் இஸ்லாமிய சட்டமும் பாரிய குழுப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.

இதிலும் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம். சகல சட்டங்களிலும் இந்த நெருக்கடிகள் உள்ளன. ஆனால் இவற்றை முழுமையாக நீக்க முடியாது.

ஏனெனில் இவை கலாசாரங்களுடன் இணைந்தவை. ஆனால் தனி நபர் சட்டங்களை கருத்திற் கொள்ள வேண்டும். பொதுவான சட்டங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.