அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனை! எடுக்கப்பட்டுள்ள முடிவு

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா யோசனை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அதனை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன இந்த நம்பிக்கையில்லா யோசனையை முன்வைத்தார்.

இதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, இன்று அதனை சபாநாயகரிடம் கையளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ரிசாத் பதியுதீனும் ஏனைய சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது.

இதேவேளை முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களின் பின்னால் அரசாங்கமே செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திசைதிருப்புவதற்காக இதனை அரசாங்கம் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.