மக்களிற்கு சொந்தமான நிலத்தை கஜூ கூட்டுத்தாபனம் அபகரிக்க முயற்சி

Report Print Malar in பாராளுமன்றம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் யுத்தத்தின் நிமித்தம் விதவையான பெண்களுக்கு வழங்கப்பட்ட 275 ஏக்கர் நிலங்களை கூட்டுத்தாபனம் எடுப்பதற்கு பல முயற்சிகள் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

வடமாகாணத்தில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற சூழல் இருக்கின்றது.

அங்கிருக்கும் மக்களுக்கு அது தொடர்பான ஊக்குவிப்புக்களை அரசாங்கம் என்ற வகையில் தங்களுடைய அமைச்சு அதற்கு வழங்க முன்வர வேண்டும்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 1994ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளால் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளாங்குளம் என்ற கிராமத்தில் கஜூ வளர்ப்பு திட்டமொன்றை ஆரம்பித்தார்கள்.

அந்த கஜூ வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த கஜூ வளர்ப்பதெற்கென்று அந்த பிரதேசத்து மக்களை கஜூ வளர்ப்பு திட்டத்திற்கு அருகாமையில் குடியேற்றி குறிப்பாக கணேசபுரம் சேவ் அ லங்கா இந்தியன் வீட்டுத்திட்டம் என்பவற்றை உள்ளடக்கி இந்த கஜூ பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஆரம்பித்ததன் பின்பு அந்த பயிர்ச்செய்கையுடன் இருக்கின்ற சகலவிதமான நடவடிக்கைகளையும் மக்களே கையாண்டு வந்தார்கள்.

தமிழீழ விடுதலை புலிகள் அதற்குரிய ஆயத்த நடவடிக்கைகளை அந்த மக்களிடம் செய்து கொடுத்தார்கள்.

அதன்பின்பு 2008ஆம் ஆண்டு யுத்தத்திற்கு பிற்பாடு அந்த கஜூ பயிர்ச்செய்கை செய்த அந்த பிரதேசத்தில் கிட்டத்தட்ட 600 ஏக்கர் நிலங்களில் இராணுவம் இருந்தது.

அந்த இராணுவத்தை கஜூ பயிர்ச்செய்கை செய்த பண்ணையிலிருந்து அகற்றி அந்த கஜூ பண்ணையை அந்த பிரதேசத்து மக்களுக்கு மீளவும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மீளவும் ஒப்படைக்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு ஜனாதிபதியின் செயலணியில் நான் கோரிக்கை வைத்திருந்தேன்.

அந்த கோரிக்கை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கோரிக்கை தொடர்பாக அதிலிருக்கின்ற 275 ஏக்கர் நிலங்கள் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டதி்ன் பின்பு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் யுத்தத்தின் நிமித்தம் விதவையான பெண்களுக்கு இந்த 275 ஏக்கர் நிலங்களை பகிர்ந்தளித்து கஜூ பயிர்ச்செய்கையை தொடர்ந்து அந்த கஜூ பயிர்ச்செய்கையை அவர்கள் செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலாளரால் ஒரு நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு அதை பராமரிக்கக் கூடிய வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கஜூ கூட்டுத்தாபனம் அந்த நிலத்தை அந்த 275 ஏக்கர் நிலங்களை கூட்டுத்தாபனத்திற்கு எடுப்பதற்கு பல முயற்சிகள் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers