நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்

Report Print Steephen Steephen in பாராளுமன்றம்

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மக்களுக்கு பொறுப்புக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலையை குறைத்து எமது அரசாங்கம் மக்களுக்கு நிவாரணத்தை வழங்கியுள்ளது. பெரிய கடன் சுமையை வைத்துக்கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை மாத்திரமல்ல, சமையல் எரிவாயு கொள்கலனையும் எமது அரசாங்கம், ராஜபக்ச அரசாங்கத்தை விட குறைவான விலையில் வழங்கி வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் பற்றி தற்போது பேசப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து விபரங்களை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்திருக்க வேண்டும்.

மார்ச் 12 அமைப்பு என்ற வகையிலும் சுதந்திரமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையிலும் சொத்து விபரங்களை மக்களுக்கு வழங்க தீர்மானித்தோம். இதுவரை 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்திற்கு தேவையான ஒரு நடவடிக்கையாக நாங்கள் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை பார்க்கின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெளிப்படை தன்மை மேலும் அதிகரிக்கும் எனவும் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.