பிணை முறி விவகாரம்! நாடாளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை

Report Print Murali Murali in பாராளுமன்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கை அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் கட்சித் தலைவர்களுடன் அடுத்தவாரம் கலந்துரையாடலை நடத்திய பின்னர் இந்த அறிக்கையை சபையில் சமர்பிப்பது குறித்து இறுதிமுடிவை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இந்த வருடத்திற்கான அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரையை அடுத்து ஆரம்பமாகியது.

ஜனாதிாதியின் சிம்மாசன உரையின் பின்னர் பிற்பகல் ஒருமணிவரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு அதன் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகலில் ஆரம்பமாகியது.

கடந்த வருட இறுதியில் சபை அமர்வுகள் இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்ட பின்னணியில், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குறித்த கோப் குழுவின் கணக்காய்வு அறிக்கை சபையில் சமர்பிப்பதை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் பற்றிய கோப் குழுவின் கணக்காய்வு அறிக்கையை சமர்பிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.