தமிழில் தேசிய கீதம் பாடுவது அடிப்படைவாத செயற்பாடாக சித்தரிக்கப்பட்டுள்ளது! ஞா.ஸ்ரீநேசன்

Report Print Malar in பாராளுமன்றம்

தமிழில் தேசிய கீதம் பாடுவது என்பது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால அரசாங்கம் மேற்கொண்ட அடிப்படைவாத செயற்பாடு என ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தான் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது பதவியேற்பு நிகழ்வின்போதும், அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றிபெறவில்லை.

சிறுபான்மை மக்களும் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று தேசிய பொங்கல் தினம் நிறுத்தப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக செலவு காரணமாக இதை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி அவர்களை விடுவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனினும் அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய ஜனாதிபதியினால் மிருசுவில் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினர் பொதுமன்னிப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக ஜனாதிபதி ஒருபக்க சார்பாக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத தமிழ் மக்களை பழிவாங்குவதனைவிட, ஏன் அவர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக இந்த தேசிய கீதம் பாடுகின்ற விடயத்தில், ஒரு கருத்து சொல்லப்பட்டது. நான் நினைக்கின்றேன் பத்திரிகை மூலமாக கிடைத்த செய்தி, அதாவது தமிழில் தேசிய கீதம் பாடுவது என்பது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால அரசாங்கம் மேற்கொண்ட அடிப்படைவாத செயற்பாடு என்று சித்தரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு ஒரு வியாக்கியானம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சிங்களமும், தமிழும் அரச கரும மொழியாகவும், தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நீண்ட காலம் போராட்டம் நடைபெற்றிருக்கின்றது என்பதையும், நாங்கள் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, இந்த இடத்தில் தேசிய கீதம் பாடுகின்ற விடயத்தில் கடந்த காலத்தில் பாடப்பட்டது இப்போது எவ்வாறு பாடப்படப் போகிறது என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...