எட்டாவது நாடாளுமன்றின் கடைசிக் கூட்டத்தொடர்!

Report Print Rakesh in பாராளுமன்றம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, 20 ஆம் திகதிவரை நடைபெறும்.

அதன்பின்னர் மார்ச் 2 ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்வரை வருடங்கள் முடிவடைந்த பின்னரே நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குக் கிடைக்கின்றது.

அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்குரிய நடவடிக்கையை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் முன்னெடுத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மறுப்புத் தெரிவித்துவிட்டார்.

எனினும், எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று எதிர்வரும் முதலாம் திகதியுடன் நான்வரை வருடங்கள் நிறைவடைகின்றன.

அதன்பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடைக்கும். இதன்படி அன்றைய தினம் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்து – பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி விடுப்பார்.

அரசமைப்பின் பிரகாரம் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாவது நாடாளுமன்றம் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி கலைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

எட்டாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 2015 செப்டம்பர் முதலாம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால், கலைக்கப்படும் வரையில் வழமைபோல் சபை நடவடிக்கைகள் இடம்பெறும்.