ரஞ்சன் எம்.பியின் சர்ச்சைக்குரிய குரல்பதிவு! இறுவட்டுக்களை வழங்குவதில் தாமதம்

Report Print Ajith Ajith in பாராளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு இறுவட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மேலும் காலதாமதமாகியுள்ளது.

ஏற்கனவே கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த இறுவட்டுக்களை செம்மைப்படுத்திய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று இது தொடர்பில் கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோதும் குறித்த இறுவட்டுக்களில் அடங்கியுள்ள குரல்கள் நாடாளுமன்ற மொழிக்கு அப்பாற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

எனவே அதனை மேலும் செம்மைப்படுத்தி அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவுள்ளதாக சபாநாயகர் கூறினார். எனினும் இதன்போது அனைத்துக்கட்சியினரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்த இறுவட்டுகள் வெளியிடப்படுவது அரசியல் நோக்கத்தை கொண்டது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்

இறுவட்டுக்கள் ஆவணம் என்ற அடிப்படையில் வராதபடியால் அதனை விநியோகிக்கவேண்டியதில்லை என்று நாடர்ளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இறுவட்டுக்கள் வெளியிடப்பட்டால் நாட்டின் கௌரவம் மேலும் பாதிக்கப்படும் என்று கூறினார்.