விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டை எழுதிக்கொடுத்த ரணில்! அரசாங்கம் குற்றச்சாட்டு

Report Print Murali Murali in பாராளுமன்றம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித திருத்தமும் செய்யப்பட மாட்டாது.

எமது அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தைப் போன்றதல்ல. இந்த நாட்டை நேசிக்கிற பிரதமரும், ஜனாதிபதியும் ஆட்சியில் இருக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவைப் போல இந்த நாட்டை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எழுதிவைக்கவில்லை. 2001ம் ஆண்டில் நீங்கள் நாட்டை எழுதிக்கொடுத்திருந்தீர்கள்.

அத்துடன், 2015க்கு பின்னர் எமது படையினருக்கு எதிராக போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு சென்றீர்கள். படையினருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானங்களுக்கு இணங்கியிருந்தீர்கள்” என தெரிவித்துள்ளார்.