20ம் திருத்தச் சட்டத்தின் இரட்டைக் குடியுரிமை குறித்த சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.
20ம் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் மூன்றாம் வாசிப்பின் போது சில திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் போது 20ம் திருத்தச் சட்டத்தின் 17ம் சரத்தான இரட்டைக் குடியுரிமை குறித்த சரத்துக்கு ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த 17ம் சரத்து தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதேவேளை, இந்த சரத்தின் ஊடாக அமெரிக்கா மற்றும் சீனப் பிரஜைகள் இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கக் கூடும் என எதிர்க்கட்சிகள் இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சரத்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றிற்கு கொண்டு வரும் நோக்கில் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.