கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அரசு அலட்சியமாக இருந்துவிட்டு பொதுமக்களைக் குறை கூறக்கூடாது. வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்குவதில் அரசு தோல்வி கண்டுள்ளது."
இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசு கடந்த ஏப்ரல் மாதத்துடன் கொரோனா வைரஸ் தொற்று முடிவடைந்து விட்டது எனக் கூறியது. ஆனால், அதன்பின்னர் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். ஆனால், அரசு கொரோனா தொற்று தொடர்பில் அலட்சியமாக இருந்துவிட்டு, தற்போது மக்கள் மீது குறை கூறுகின்றது.
முதலாம், இரண்டாம் அலைகளின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மூன்றாம் அலையைப் பொறுப்பேற்க மறுக்கின்றனர்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஆரம்பத்திலே பல நாடுகள் அது தொடர்பான சட்டங்களை கடந்த ஏப்ரல் மாதத்திலே உருவாக்கின.
ஆனால், எமது நாட்டில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான் கொரோனாத் தடுப்புக்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் கொரோனாப் பரவலுக்கு அரசு மக்களைத் திட்டக்கூடாது.
அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். நாட்டு மக்களையும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதையும் அரசு கைவிட்டுவிட்டுள்ளது.
மக்களைப் பாதுகாக்கவே நாம் நாடாளுமன்றத்துக்கு வருவதுடன், பதவிகளையும் பெற்றுக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் செயற்பட வேண்டும்" - என்றார்.