தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றில் மாவீரர்களை நினைவு கூர்ந்து வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்துள்ளார்.
“இது கார்த்திகை மாதம், அந்த அடிப்படையில் இந்த மண்ணுக்காக உயிரை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நான் முதலாவது நினைவு கூற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாதவரையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்காக பாரியளவில் செலவிடப்பட்டதாகவும் இதனால் வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தொகை துண்டு விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது வேறும் ஒர் ஜனாதிபதியோ பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை தேடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் குரல் கொடுத்து வருவதாகவும், அரசியல் தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டால் வெளிநாட்டு முதலீடுகளை தம்மால் கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய பல்வேறு திட்டங்கள் தங்களிடம் காணப்படுவதாகவும் அந்த திட்டங்களை அமுல்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983ம் ஆண்டு கறுப்பு ஜூலை நிலைமையே இன்றளவிலும் நீடித்து வருகின்றது எனவும், குறித்த காலப் பகுதியில் வெளியேறிய புத்திஜீவிகள் பலர் நாடு திரும்பவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் ஒத்துழைப்பு இன்றி இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கின்றார், அங்கிருக்கும் காரியாலயமொன்றில் மக்களை சந்திக்கின்றார், இது எந்த வகையில் சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான ஒருவர் இவ்வாறு செய்ய முடியுமா என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video...