போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய சிரேஸ்ட நாடாளுமன்ற உறப்பினர் மஹிந்த சமரசிங்க மிகவும் பெருமிதத்துடன் “பிரபாகரன் தப்பித்துவிடுவார் என்பதனால் யுத்த வலயத்திலிருந்த சிவிலியன்களை வெளியேற அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடமளிக்கவில்லை” என கூறியிருந்தார் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறியதன் மூலம் சிவிலியன்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேற இடமளிக்காமை போர்க் குற்றச் செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாடாளுமன்றில் உரையாற்ற தாம் விரும்பவில்லை எனவும் ஏனெனில் மாற்றுக் கருத்துக்களுக்கு இந்த அவையில் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களை மீட்பதற்காக தாம் கடுமையாக போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் பல தடவைகள் பேசியதாகவும் அப்போது, அமைச்சரும் தாமும் இரண்டு ஆயர்களுடன் வன்னிக்கு சென்று சிவிலியன்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து இணங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை லட்சம் சிவிலியன்கள் அந்த காலப் பகுதியில் யுத்த வலயத்தில் சிக்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், மறுநாள் காலை அரசாங்க தொலைக்காட்சியில் அனைத்து சிவிலியன்களும் யுத்த வலயத்திலிருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது எனவும் ஆனால் அது உண்மையில்லை என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் ஏனைய பொறுப்புவாய்ந்த நிறுவனங்களின் புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் சிக்கியிருந்தனர் என்பது உண்மையே என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரசாங்கம் 70,000 சிவிலியன்களுக்கு மட்டுமே உணவு மருந்து வகைகளை அனுப்பி வைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தொகையான மக்கள் சிக்கியிருந்த நிலையில் அரசாங்கம் ஏன் ஓர் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு மட்டும் இவ்வாறு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
படைத்தரப்பைச் சேர்ந்த 52 உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வீசா கிடைப்பதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதாகவும், போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு வீசா வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மெய்யாகவே இந்த படை அதிகாரிகள் மீது கரிசனை கொண்டிருந்தால் சர்வதேச சுயாதீன விசாரணைகளை நடாத்தி அந்த அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என நிரூபித்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் விசாரணைகளிலிருந்து தப்பிச் செல்வதாகவும் அரசாங்கம் அவ்வாறு செய்வது உசிதமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு படையணிகளில் 20ல் 16 வடக்கு கிழக்கில் காணப்படுவதாகவும், ஆறு தலைமையகங்களில் நான்கு வடக்கு கிழக்கில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாருடைய பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது யார் உங்களது எதிரிகள் ? புலிகளே எதிரிகள் என கூறுவோர் உண்மையில் தமிழ் மக்களையே அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டுமென கூறுவது மிகவும் வெட்கம் கெட்ட செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.