புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச விடுத்துள்ள கோரிக்கை!

Report Print Murali Murali in பாராளுமன்றம்
513Shares

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

வடக்கு - கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முறையான சூழலியல் ஆய்வுகளை செய்தும், சுற்றுச்சூழல் நிலைமைகளை கருத்தில் கொண்டும் அதற்கு ஏற்றால் போல் இரசாயன வலயம் உருவாக்கப்படும்.

இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து பல காரணிகளை ஸ்ரீதரன் எம்.பி, சபையில் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தமையை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலர் வாய்களில் இருந்து இவ்வாறு மக்களின் உண்மையான பிரச்சினைகள் வெளிவராது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளில் விருப்பம் காட்டுவதாக தெரிவித்தார்.

அவ்வாறான முதலீட்டாளர்கள் இருந்தால் எம்முடன் தொடர்புபடுத்திவிடுமாறு ஸ்ரீதரனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்.

தேசிய தொழிற்சாலைகளை பலப்படுத்த அரசாங்கம் துரிதமாக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. புதிய தொழில் பேட்டைகளை உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.

ஏறாவூர் பகுதியில் துணி தொழிற்சாலையொன்றும் உருவாக்கப்படவுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக இந்த பகுதிகளில் வாழ்கின்றனர். ஆகவே ஐந்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு கொடுக்க முடியும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கவுள்ளோம். இதுவும் அப்பகுதி மக்களுக்கான வலமாக மாற்றுவோம். சகல அடிப்படை வசதிகளையும் வழங்குவோம்.

தொழிற்சாலை கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.