சஜித்தின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முயற்சி! சபையில் ஏற்பட்ட குழப்பம்

Report Print Murali Murali in பாராளுமன்றம்
173Shares

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் முயன்றதால் நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை நிலவியது.

இலங்கை தோல்வியுற்ற நாடு என்று பிரேமதாச தெரிவித்த கருத்து அவைக் குறிப்பிலிருந்து இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்தபோது சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போது எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தோல்வியடைந்த நாடு என குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்து சபாநாயகர் அதனை நீக்குவதற்கு முயன்றார்.

இதன் காரணமாக அவையில் குழப்பநிலையேற்பட்டது.

நாட்டிற்கான தனது கடமையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது, என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன் என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

நாட்டின் இரண்டாவது, மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்த புள்ளிவிபரங்களை நாட்டிற்கு நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர் இலங்கை தோல்வியடைந்த நாடு என நீங்கள் தெரிவித்திருப்பது தவறு, ஆகவே உங்கள் உரையிலிருந்து இதனை அகற்ற அனுமதியுங்கள் என கோரினார்.

எனினும் எதிர்கட்சி தலைவர் தான் ஒருபோதும் தான் ஒருபோதும் இலங்கை தோல்வியடைந்த நாடு என குறிப்பிடவில்லை என தெரிவித்ததுடன் அரசாங்கத்தின் தோல்வியடைந்த திறமையற்ற செயற்பாடுகளையே குறிப்பிட்டேன் என தெரிவித்தார்.

தோல்வியடைந்த நாடு என நான் குறிப்பிடவில்லை, இதனை நான் வலியுறுத்துகின்றேன், எனக்கு எனது ஆங்கிலம் தெரியும், என் மொழியாற்றலுக்கு மதிப்பளியுங்கள், நான் தோல்வியடைந்த நாடு என ஒருபோதும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கிட்டு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியும் என்றார்.

"இலங்கை தோல்வியுற்ற நாடு என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னால், அது அவருடைய கருத்து. எனவே ஒரு உறுப்பினர் வெளிப்படுத்திய கருத்தை யாரும் நீக்க முடியாது, ”என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவைக் குறிப்பு அறிக்கைகளை சரிபார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.