தம்மை விமர்சனம்செய்து கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டமைக்கு அமைச்சர் பந்துல எதிர்ப்பு!

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
234Shares

அமைச்சர் பந்துல குணவர்தனவை விமர்சனம் செய்து அரசாங்க ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட கேலிச் சித்திரம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு இயங்கி வரும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தினமின பத்திரிகையில் தமக்கு எதிராக ஓர் கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கோ அல்லது நாடாளுமன்றிற்கோ சவால் விடுக்கும் வகையில் சில அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்றில் தாம் விமர்சனம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சர்வ வல்லமையுடைய அதிகாரிகளினால் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என தாம் கூறியதனைத் தொடர்ந்து, அரசாங்க பத்திரிகையில் தம்மை விமர்சனம் செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு கேலிச்சித்திரம் பிரசுரித்த ஊடகத்திற்கு பொறுப்பானவர்களை அழைத்து இது ஓர் சிறப்புரிமை பிரச்சினையாக கருதி விசாரணை நடாத்துமாறு சபாநாயகரிடம் வினயமாக வேண்டிக்கொள்வதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக நிறுவனத்தில் பணியாற்றுவோர் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக்கொள்பவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்ற தொனியில் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பந்துல குணவர்தனவை சட்டவிரோத வர்த்தகர் ஒருவர் கிரிக்கட் மட்டையைக் கொண்டு, பந்துகளினால் தாக்குவதனைப் போன்று இந்தக் கேலிச்சித்திரம் அமைந்துள்ளது.