இலங்கை அமைச்சரவையில் உள்ள முக்கிய குற்றவாளிகள் : ஆதாரங்களை வெளியிட்ட சர்வதேச அமைப்பு

Report Print Banu in பாராளுமன்றம்
913Shares

இலங்கை அமைச்சரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஊழல், மோசடி அல்லது கொலை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் என சர்வதேச அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

குற்றம் சாட்டப்பட்டவரின் விளக்கப்படத்தை வெளியிடுவதன் மூலம் சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை குறிக்கும் வகையில் இந்த ஆய்வை நடத்திய உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அவ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒரு அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர் அரசின் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் தனது குற்றமற்றத் தன்மையை நிரூபிக்க வேண்டும்" என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் இருந்து அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

"இந்த அமைச்சர்களில் பத்து பேர் முன்னைய ஆட்சியின் போது அவர்கள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கின்றனர். இது பிரச்சினையில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் - நீதித்துறை முறையையும் பொறுப்புப்கூறலை ஆதரிக்கும் நிறுவனங்களையும் மீறுவது குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதை நினைவில் கொள்வதும் நல்லது. ”

அரசியல் பழிவாங்கலுக்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 2,000 பக்கங்களுக்கும் மேலான அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைத்த மறு தினமே, இலங்கை ஆட்சியாளர்கள் மீதான தனது சமீபத்திய விமர்சனத்தை உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்டது.

1971 முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.