பொருட்களின் விலை குறையாமல் அதிக வர்த்தமானிகளை வெளியிடுவதில் மக்களுக்கு என்ன பயன்? ரிஷாட் பதியுதீன்

Report Print Kanmani in பாராளுமன்றம்
46Shares

இஸ்லாம் பற்றி பூரண அறிவைப் புரிந்து கொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து,அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயகம்மன்பில அண்மையில் நாடாளுமன்றத்தில் குர்ஆன் தொடர்பில் கூறிய கருத்துக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.

பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

60,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக இந்த அரசாங்கம் கூறிவருகின்றது. 2019.12.31க்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகளில், சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தராதரம் இருந்தும் இன்னும் நியமனம் கிடைக்காது துன்பப்படுகின்றனர்.

இந்த வருடம் ஜனவரி 05 இல் வந்த பட்டியலிலும் இவர்களின் பெயர் இல்லையென்று முறையிட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியமனங்களை வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அத்துடன், மன்னார் மாவட்டத்தின் தேர்தல் உதவி ஆணையாளர் ஜெனிட்டர், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே, புத்தளத்தில் கொத்தணி மூலம் வாக்களித்த 7000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை, அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகளைப் பயன்படுத்தி, திட்டமிட்டு இடாப்பிலிருந்து நீக்கியுள்ளார்.

இதற்கு நியாயம் கேட்டு தேர்தல் திணைக்களத்திடமும், மனித உரிமைகள் ஆணையகத்திடமும் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

எனவே, இந்த உயர் சபையின் ஊடாகவும் இந்த வேண்டுகோளை விடுப்பதுடன், இவ்வாறான மோசமான அதிகாரிகளை, மக்கள் இன ஒற்றுமையுடன் வாழும் மாவட்டங்களில் இருந்து இடமாறும், அவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட இந்த வாக்காளர்கள் நாட்டில் எங்குமே வாக்களிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு மேற்கொள்வதற்கான திகதி முடிவடைந்துள்ளதால், ஆகக் குறைந்தது 31ஆம் திகதி வரை அதனை நீடித்து, அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்குமாறு இந்த உயர் சபையில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.