சிறி ஐயா எனப்படும் சோமவன்ச அமரசிங்க..

Report Print Akshi in அரசியல்
சிறி ஐயா எனப்படும் சோமவன்ச அமரசிங்க..

இயற்கை எய்திய ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தென் இலங்கையின் முற்போக்கு அரசியல் பிரவாகத்தின் முக்கிய திருப்பு முனைகளில் ஒன்றாக திகழ்ந்தார் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் அடிப்படையில் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளை கொண்டு ஆட்சி நடத்தி வந்த நிலையில் மாற்றுக் கொள்கைகளை முற்போக்கான முறையில் வெளிப்படுத்திய அரசியல் தலைவர்களில் சோமவன்ச அமரசிங்கவிற்கு முக்கிய இடம் காணப்படுகின்றது.

ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவரான ரோஹன விஜேவீரவின் நெருங்கிய சாகக்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்க கட்சியின் இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புக்களில் முதனிலை வகித்து அதில் வெற்றியீட்டியிருந்தார்.

சோமவன்ச அமரசிங்கவின் அரசியல் போராட்ட வாழ்க்கையில் சில முக்கிய துளிகள்,

களுத்துறை வித்தியாலத்தின் பழைய மாணவரான சோமவன்ச அமரசிங்க 1969ம் ஆண்டில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்டார். சுமார் நாற்பத்து ஐந்து ஆண்டுகள் அவர் ஜே.வி.பி.யின் செயற்பாட்டு உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின் போது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவை பிடிக்கும் திட்டத்தில் பங்கேற்ற ஜே.வி.பி உறுப்பினர்களில் சோமவன்ச அமரசிங்கவும் ஒருவராவார். இந்த முயற்சி தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அந்த ஆண்டில் பாதுகாப்புத் தரப்பினர் சோமவன்ச கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். 1974ம் ஆண்டு சோமவன்ச அமரசிங்கவிற்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1984ம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினராகின்றார். இந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பியை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தடை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1987 – 1989 ஜே.வி.பி.யின் இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் 14 பேரைக்கொண்ட ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர்களில் உயிர் தப்பிய ஒரேயொரு உறுப்பினர் சோமவன்ச அமரசிங்க மட்டுமேயாகும்.

ஜே.வி.பி. கட்சியில் சோமவன்ச அமரசிங்க சிறி ஐயா என அழைக்கப்பட்டார். கட்சியின் முன்னிலை அரசியல் பீட உறுப்பினராக அவர் கருதப்பட்டார். 88-89ம் ஆண்டு கிளர்ச்சி உச்ச கட்ட காலங்களில் கட்சியின் நிதி விவகாரங்களுக்கு பொறுப்பாக சோமவன்ச கடமையாற்றியிருந்தார். கட்சியின் அனைத்து நிதி கொடுக்கல் வாங்கல்களையும் சோமவன்ச மேற்கொண்டிருந்தார்.

அமரசிங்க கட்சியின் நிதிப் பொறுப்பாளராக கடமையாற்றிய காலத்தில் பாரியளவிலான நிதி காணாமல் போனதாக ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர். எனினும் சோமவன்ச இதற்கு பொறுப்பு என எவரும் குற்றம் சுமத்தவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் வலதுகரம் எனக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் சிறிசேன குரேயின் மைத்துனரே சோமவன்ச அமரசிங்கவாவார். பிரேமதாச அரசாங்கமே இராணவ ரீதியில் ஜே.வி.பி.யினரை இல்லாதொழித்திருந்தது. சோமவன்ச – சிறிசேன குரேவிற்குக் காணப்பட்ட உறவு முறைகளின் காரணமாக மிக நெருக்கடியான ஜே.வி.பி. கிளர்ச்சியின் இறுதிக் கால கட்டத்தில் சோமவன்ச அமரசிங்க நாட்டை விட்டு தப்பிச்சென்றார் என கூறப்பட்டது.

முதலில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சோமவன்ச பின்னர் ஐரோப்பிய நாடுகளில் 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். 2001ம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க நாடு திரும்பியிருந்தார். 1993ம் ஆண்டில் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மீளமைப்பு பணிகளில் சோமவன்ச அமரசிங்க முக்கிய பங்காற்றியிருந்தார். இலங்கையில் இருந்த அரசியல் பீடத் தலைவர்களுடன் சோமவன்ச அப்போது தொலைநகல் ஊடாக தொடர்புகளைப் பேணியிருந்தார்.

2006ம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியை பாலியல் தொழில் குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்திருந்தனர். இது குறித்து சோமவன்சவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது. “அவர் ஒர் பாலியல் தொழிலாளி என்ற போதிலும் நான் இன்னமும் அவரை என் சகோதரியாகவே கருதுகின்றேன்” என தைரியமாக ஒளி மறைவின்றி பதிலளித்திருந்தார். இந்த பதில் பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சோமவன்ச அமரசிங்க ஜே.வி.பி கட்சியின் தலைமைப் பொறுப்பினை கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைத்தார். 2015ம்ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என குற்றம் சுமத்தி அவர் கட்சியை விட்டு விலகினார். அதன் பின்னர் ஜனதா சேவக்க கட்சி என்னும் கட்சியை உருவாக்கியிருந்தார்.

கட்சிக்காகவும் முற்போக்கு கொள்கைகள் கோட்பாடுகளை நிலைநாட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவும் சோமவன்ச அமரசிங்க வனவாசம், சிறைவாசம், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலான வெளிநாட்டு அரசியல் புகலிடம் என பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளார்.

தென்னிலங்கை முற்போக்கு ஆயுத போராட்ட வரலாறு என்றாலும் ஜனநாயக அரசியல் ரீதியான முற்போக்கு போராட்ட வரலாறு என்றாலும் சோமவன்ச அமரசிங்கவின் பெயர் நீங்கா இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Latest Offers

Comments