வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மக்களுக்காக மழைநீர் சேமிப்புத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று காலை பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நல்லாட்சி மக்களுக்காக இரண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் காணாமல் போனவர்களை கண்டறிதல் ஆகிய வேலைத்திட்டங்களையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
யுத்தக்காலத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் அரச தரப்பினரால் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை அவர்களின் உறவினர்கள் இன்றும் தேடி வருகின்றனர்.
எவ்வாறாயினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன், தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.`