இலங்கை அரசாங்கத்தை பாராட்டும் உலகத்தமிழர் பேரவை

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை அரசாங்கம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியமையானது, வரவேற்கக்கூடிய விடயம். இது பொறுப்புக்கூறல் மற்றும் நீதி, நல்லிணக்கம் என்பவற்றின் வழியில் முக்கிய முதல் படியாக அமைந்துள்ளது என உலகத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சிறிசேன - ரணில் அரசாங்கத்தின் இந்த முயற்சி, தீவிரமாக முன்னெடுக்கப்படுமானால், அதன் மூலம் காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலையை கண்டறியமுடிவதுடன் அவர்களுக்கு உண்மையையும் நீதியையும் பெற்றுக்கொடுக்கமுடியும் என்று பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகியவற்றின் ஆதரவு கிடைத்தமை முக்கியமானதாகும்.

இந்த நிலை தொடருமாக இருந்தால், தமிழர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று பேரவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவே இந்த முனைப்பை முன்கொண்டு சென்றமையையும் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான இந்த நிரந்தர அலுவலகம், உண்மையை கணடறியும் நிலைப்பாட்டில் முதல்படி என்று குறிப்பிட்டுள்ள உலக தமிழர் பேரவை, ஐக்கிய நாடுகளின் யோசனையின் ஏனைய விடயங்களையும் தீவிரமான முன்னெடுத்து சென்று நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இந்தநிலையில் சமாதானத்தை ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தமது ஆதரவு இருக்கும் என்றும் உலக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

Comments