எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான பார்வை

Report Print Samy in அரசியல்

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் பரவலான அவதானத்தைப் பெற்றுள்ளது.

குறிப்பாக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் நேற்று முன்தினம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 23/2 கீழ் பாராளுமன்றத்தில் எழுப்பிய கவனயீர்ப்பு வினாவுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இச்சம்பவத்தில் இலங்கையருக்கு தொடர்பில்லை என்று குறிப்பிட்டதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த 'நாம் தமிழர் கட்சி'யின் மலேசிய கிளை ஆதரவாளர்களே இதனைச் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

அத்தோடு இச்சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை மலேசியாவிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிக்கின்றார்.

அதேநேரம் பாராளுமன்றத்திற்கு வெளியே இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் செய்தியாளர் மாநாடுகளிலும் இச்சம்பவத்திற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு, கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் எல்லாத் தரப்புக்களும் நாடு என்ற அடிப்படையில் கண்டனங்களையும், கருத்துக்களையும் முன்வைக்கின்ற போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது அணியினரும் இச்சம்பவம் தொடர்பில் இனவாத அடிப்படையிலேயே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்துள்ளன. இதனூடாக இனவாத அரசியல் இலாபம் தேடவே இவர்கள் முயற்சி செய்கின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருமான இரா சம்பந்தன் இச்சம்பவத்தை வித்தியாசமான கண்ணோட்டத்தில் நோக்கி, முன்வைத்துள்ள கருத்துக்கள் பல மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளன. அவரது பார்வை சில நேரம் உண்மையாகவும் இருக்கலாம்.

இந்த நாடு மூன்று தசாப்த காலம் உள்நாட்டு யுத்தத்திற்கு முகம் கொடுத்தது. இதன் காரணத்தினால் இந்நாடு இழந்தவைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதேநேரம் இந்த யுத்தம் எவ்வாறு தோற்றம் பெற்றது? அதன் பின்புலம் என்ன? என்பன தொடர்பில் இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. என்றாலும் 30 வருட காலம் நீடித்த இந்த யுத்தம் 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 09ம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், இந்நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

அதுவும் கடந்த கால அரசியல் வரலாற்று அனுபவங்களில் பெற்றுள்ள பாடங்களை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கு முறையாக இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் நாடு இன்று ஸ்திரத்தன்மையையும், தேசிய ஒற்றுமையையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில் தான் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இருப்பினும் சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் ஒரே இரவில் ஏற்படுத்திவிட முடியாது.

அவற்றை அடைந்து கொள்வதற்கான நகர்வுகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படுவது நிதர்சனம். இது எல்லா மட்டங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையும் கூட.

இவ்வாறான நிலையில், இடம்பெற்றிருக்கும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இச்சம்பவத்தில் இலங்கையர் எவராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை வரவழைத்து தண்டிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் 'நாடு ஸ்திரத்தன்மையையும், தேசிய ஒற்றுமையையும் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வாறான சூழலில் இவ்வகைச் சம்பவங்கள் தேவையற்றவை.

இவ்விதச் சம்பவங்களின் பின்விளைவுகள் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களின் முட்டாள்தன செயற்பாடுகளே இவை.

இவ்வகைச் செயற்பாடுகளை ஊக்குவிக்காது அவற்றை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதை விரும்பாத சிலரின் தேவைக்காக தாம் பயன்படுத்தப்படுவதைப் புரிந்து கொள்ளாதவர்களே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நாட்டில் ஸ்திரமின்மையும், பதற்றமும், எந்நேரமும் மோதல்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்களது தேவையாக உள்ளது. இவை அற்ப அரசியல் இலாபம் தேடுவதற்கான நடவடிக்கையே அன்றி நாட்டுக்கு நன்மை சேர்ப்பவை அல்ல.

இவ்வாறானவர்களின் தேவைகளுக்கு எற்ப செயற்படும் அளவுக்கு எவரும் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று- நான் கருதவில்லை' என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது பெரிதும் வரவேற்கத்தக்க பார்வை. சிலரது நன்மைகளுக்காக முழு நாட்டையும் நாட்டு மக்களையும் இக்கட்டான நிலையில் தள்ளிவிட முடியாது.

நாட்டில் இப்போது தான் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு நாட்டில் நிலைபேறான சகவாழ்வும் நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதுவே நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் விருப்பம். அதற்காக சகலரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பும், அறிவிப்பும் நல்ல அடித்தளம்.

Comments