தமிழீழத்திற்கான புதிய அரசியலமைப்பே வரப்போகிறது! விமல் வீரவன்ச காட்டம்

Report Print Samy in அரசியல்

வடக்கு, - கிழக்கை இணைத்து தனி தமிழீழத்திற்கான கனவை நனவாக்கும் தேசிய மற்றும் சர்வதேச பிரிவினைவாதிகளின் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுக்கும் அரசியலமைப்பையும் சக்திகளையும் தோல்வியடைய செய்வதற்கு நாட்டு மக்கள் பேதங்களை மறந்து போராட வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பு பாராளுமன்றத்தின் குழு அறை நான்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு விடயங்கள் குறித்து தனது அதிகாரங்களை மீறிய வகையில் செயற்பட்டார்.

ஆனால் அரசாங்கம் அவரது வருகைக்கு முன்னர் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கான சட்ட மூலத்தை நிறைவேற்றியதுடன் , புதிய அரசியலமைப்பை நவம்பர் மாதம் கொண்டு வருவதாகவும் தகவலை கசிய விட்டது.

புதிய அரசியலமைப்பு விடயம் குறித்து அரசாங்கத்தின் தகவல்களின் பின்னணியில் மேற்குலக பிரிவினைவாதிகளே உள்ளனர். புதிய அரசியலமைப்பு என்பது மேற்குலக நாடுகளின் தயாரிப்பாகும்.

மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் மற்றும் சம்பந்தன் உள்ளிட்ட பிரிவினைவாதிகளின் சக்திகளின் தேவையே புதிய அரசியலமைப்பின் நோக்கமாகும்.

இலங்கையை துண்டாடி வடக்கு, கிழக்கை இணைத்து தமிழீழம் அமைக்கும் திட்டத்தை தடுக்க மக்கள் அணிதிரள வேண்டும்.

வெளிவிவகார அமைச்சர் நவம்பரில் புதிய அரசியலமைப்பு வரைபை முன் வைப்பதாக வெறுமனே கூறவில்லை. மாறாக பிரிவினைவாதிகளின் அவசரமான தேவையை ஈடு செய்யும் வகையிலேயே காணப்படுகின்றது.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய அரசியலமைப்பை அவசரமாக கொண்டு வருவது என்பது சாத்தியற்ற விடயம்.

65 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை காட்டிக் கொடுக்க அனுமதிக்க முடியாது.

ஆனால் பிரிவினைவாதிகளின் தேவைக்காக நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காட்டிக் கொடுக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது என்றார்.

Latest Offers

loading...

Comments