விவேகத்துடன் இணைந்த வீரமே நிரந்தரமான வெற்றிகளை எமதாக்குகிறது: சிறீதரன்

Report Print Arivakam in அரசியல்

வீரமும் வீர விளையாட்டுக்களும் எங்களுடைய வாழ்வியலிலும் வரலாற்றிலும் இணைந்தவை. அதுவே எமது இனத்திற்கு பலம் சேர்த்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இளந்தளிர் விளையாட்டுக்கழகம் போர்க்காலத்தில் மறைந்த தமது கழக வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி 04.09.2016 அன்று கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

வீரமும் வீர விளையாட்டுக்களும் எங்களுடைய வாழ்வியலிலும் வரலாற்றிலும் இணைந்தவை. அதுவே எமது இனத்திற்கு பலம் சேர்த்தது.

இன்று எங்களுடைய இளைய சமூகம் விளையாட்டுக்களினூடாக சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். அவர்கள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றிகளின் பின்னால் பிறரது கூட்டு உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதை மறந்துவிடமுடியாது.

வெற்றி பெறுகிறபோது மகிழவும் தோல்வி அடைகின்ற போது துவளவும் விளையாட்டுக்கள் நடத்தப்படுவதில்லை. தோல்விகளை அடைகின்ற போது வெற்றியை அடைவதற்கான வழிகளைத் தேடவேண்டுமே தவிர பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்தவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது.

உண்மையான வெற்றி ஒன்று நேர்மையாக பெறப்படுகின்றபோது அது மகிழ்ச்சிக்குரியதாகிறது. அத்தகைய வெற்றிகளையே சமூகம் விரும்புகிறது.

ஆகவே உங்களுடைய வீரம் திறமைகளை விவேகத்துடன் இணைந்த வகையில் வெளிப்படுத்துகின்றபோது உங்களைத் தாங்கி நிற்கின்ற சமூகம் பெருமை கொள்கிறது என்றார்.

இளந்தளிர் விளையாட்டுக்கழக தலைவர் சுதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் நிமலராஜன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கிராம அலுவலர் சத்தியநாதன், வட்டக்கச்சி அ.த.க பாடசாலை முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற திருநகர் விளையாட்டுக்கழகம் மற்றும் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்திற்கு இடையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

Latest Offers

loading...

Comments