தீர்வுத்திட்டமும் தலைவர்களின் பொறுப்பும்

Report Print Samy in அரசியல்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த செயற்பாட்டை எவ்வாறு மேற்கொள்ளும் என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் பிரதான வழிநடத்தல் குழுவையும் அதன் கீழ் ஆறு உப குழுக்களையும் நியமித்துள்ளதுடன் வழிநடத்தல் குழுவே புதிய அரசியலமைப்புக்கான நகல் வடிவத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

எனினும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வைக் காணும் செயற்பாட்டில் ஒருவிதமான தாமதம் நிலவுவதாகவும் அவ்வப்போது கரிசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, தேசிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான அணுகுமுறை அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் பல்வேறு தெளிவற்ற தன்மைகள் தென்படுகின்றன.

இவ்வாறான நிலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சில விடயங்களை முன்வைத்திருக்கிறார்.

அதாவது தேசிய இனப்பிரச்சினைக்கு எழுபது ஆண்டு காலமாக தீர்வு காணப்படவில்லை. இதனாலேயே முப்பது ஆண்டு கால யுத்தத்தை எதிர்கொண்டோம். இணக்கப்பாட்டு அரசியலின் ஊடாக நிரந்தர தீர்வை நோக்கி செல்வதே எமது நோக்கமாக உள்ளது. அதற்காக மூவினங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனை இட்டு கவலையடையவேண்டியுள்ளது. எமது தேர்தல் பிரகடனத்தில் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்தோம். மக்கள் ஆணை எமக்கு கிடைத்தது. எமது இணக்கப்பாட்டு அரசியல் பிரவேசத்தின் ஊடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னுள்ள பொருளாதார, சர்வதேச சவால்களை எதிர்கொண்டு நாட்டை சுபீட்சமான பாதையில் இட்டுச்செல்கின்றோம். அதேபோன்று நிரந்தரமான தீர்வுகளுக்காக நாங்கள் செயற்படும்போது அதனை விமர்சிக்கின்றனர். சர்வதேச தலையீடுகளற்ற தேசியத்துவமான தீர்வுகளை ஏற்படுத்துவதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள், சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதனூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், புதிய அரசியலமைப்பை விமர்சிக்கும் வகையில் பலர் ஒவ்வொரு இடங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அவ்வாறான செயற்பாடுகள் நாட்டுக்கு செய்யும் துரோகமாகும். எனவே, அனைத்து இன மக்களின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மிகவும் திடமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். விசேடமாக அண்மைய அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றன.

எனவே, இவ்வாறு மிகவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதானது இதுவரை காலமும் தீர்க்கப்பட முடியாது காணப்படுகின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை இலகுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியாமல் போனமைக்கு பிரதான காரணமாக இரண்டு பிரதான கட்சிகளினதும் இணக்கமின்மையே காணப்பட்டது. இரண்டு பிரதான கட்சிகளிலும் ஒரு கட்சி ஆட்சியிலிருக்கும்போது ஏனைய கட்சி ஒத்துழைப்பு வழங்காத நிலைமை கடந்தகாலம் முழுவதும் நீடித்தது.

குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகளை எட்டுவதற்கு முயற்சித்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை கைகூடாமல் போயின. இதற்கு இரண்டு கட்சிகளும் தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படாமையும் ஏதுவாக இருந்தது.

இந்நிலையில் அவ்வாறான நிலைமை மாற்றமடைந்து தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஐந்து வருடங்களுக்கு ஆட்சி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. அந்த ஐந்து வருடங்களில் ஒரு வருடம் ஏற்கனவே முடிந்து விட்டது.

இந்த ஒருவருட காலத்தில் நாட்டின் சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையில் தேசிய நல்லாட்சி அரசாங்கம் நம்பிக்கையான சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அவ்வாறு ஒருவருடகாலத்தில் தேசிய அரசாங்கம் மேற்கொண்ட நல்லெண்ண செயற்பாடுகளே தேசிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் விடயத்திலும் புதுவிதமான நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

அந்தவகையில் எவ்வாறான சவால்கள் வந்தாலும் மக்களின் ஆசியுடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்.

இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை புரிந்து கொண்ட இரண்டு தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதானது தீர்வு தொடர்பான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

மேலும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அதாவது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தீர்வைக் காணும் செயற்பாட்டில் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்.

அதற்காகவே இராஜதந்திரமாகவும் சமயோசிதமாகவும் அரசியல்காய்களை நகர்த்தி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

எனவே, அரசாங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்த சாதகமான அணுகுமுறையைப் பயன்படுத்தி தேசிய பிரச்சினைத் தீர்வில் இதயசுத்தியுடனும் நம்பகத்தன்மையுடனும் செயற்படவேண்டியது அவசியமாகும்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ்பேசும் மக்கள் தமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக பாரிய அர்ப்பணிப்புக்களை செய்திருக்கின்றனர். ஆனால், இதுவரை தீர்வு என்ற கனியை பெறமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, தமிழ் பேசும் மக்களின் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்களின் அரசியல் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நியாயமான தீர்வுத்திட்டமொன்றை நோக்கிப் பயணிப்பதற்கு தற்போது இருக்கின்றதைவிட சிறந்த சூழல் ஒன்று இனிவரும் காலங்களில் அமையுமா என்பது கேள்விக்குறியாகும்.

எனவே, அந்த புதுவிதமான அரசியல் சூழலில் உரிய பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

அதனை நோக்கி அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடனும் நேர்மைத்தன்மையுடனும் செயற்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

Latest Offers

loading...

Comments