வரலாற்றில் என்றுமே சந்தித்திருக்காத புதுமையான காட்சி!

Report Print Samy in அரசியல்

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் தொடக்கம் எமது நாடு விரோத அரசியலிலேயே காலம் கடத்தி வந்துள்ளது.

பிரதான தேசியக் கட்சிகள் இரண்டினதும் வேற்று அரசியல் முடிவுக்கு வருவதற்கு சுமார் ஆறரை தசாப்த காலம் சென்றிருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் தோன்றியிருக்கும் நல்லிணக்கத்தை இன்னும்தான் உண்மையென்று நம்ப முடியாதிருக்கிறது.

அதிகாரத் தலைமையைக் கைப்பற்றிக் கொள்வதற்காக இருவேறு துருவங்களாக நின்று அரசியல் யுத்தம் நடத்தி வந்த இரண்டு கட்சிகளும் இப்போது தோழமையுடன் இணக்கப்பாட்டு அரசியலைக் கடைப்பிடித்து வருகின்றன.

கடந்த வருட ஜனவரியில் உருவான இந்த நல்லிணக்கம் இன்றுவரை சவால்களைக் கடந்து தொடருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த தேசிய மாநாடு கடந்த வாரம் நடைபெற்ற போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கே விசேடமான அதிதியாகப் பங்கேற்றார்.

இவ்விரு கட்சிகளும் ஆறரை தசாப்த காலமாக விரோத அரசியல் நடத்தி வந்ததென்பதை இப்போது நம்ப முடியாமலிருக்கின்றது.

ஐ. தே. கவுக்கும் சு.கவுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் உள்ளதென எதிரணியினர் விமர்சித்து வருவது உண்மையென்பதை இம் மாநாட்டின் போது காண முடியவில்லை.

அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் எழுபதாவது வருடாந்த மாநாடு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமானதொரு அதிதியாகப் பங்கேற்றார்.

அது மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான அமரர் எஸ். டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்கவின் புதல்வியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்கவும் இம் மாநாட்டில் பங்கு கொண்டார்.

ஐ. தே. க மற்றும் சு. க ஆகியவற்றின் தலைவர்களான ரணில், மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா ஆகிய மூவரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டமை புதியதொரு அரசியல் கலாசாரத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் என்றுமே சந்தித்திருக்காத புதுமையான காட்சி இது.

பிரதமர் ரணில் இம் மாநாட்டில் வைத்து சு.கவின் ஸ்தாபகத் தலைவரான அமரர் பண்டாரநாயக்கவின் உருவப் படமொன்றை ஞாபகார்த்தச் சின்னமாக ஜனாதிபதி மைத்திரிக்கு வழங்கியிருந்தார்.

அதேசமயம் சு.கவின் முன்னைய தலைவரும், அன்றைய பிரமருமான அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவப்படமொன்றை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரதமர் ரணில் நினைவுச் சின்னமாக அங்கு வழங்கி வைத்தார்.

இணக்க அரசியலானது உண்மையில் ஆரோக்கியமாகவும் பண்பாகவும் இருக்கின்றது.

உலகில் புதிய அரசியல் கலாசாரமொன்றுக்கு உதாரணமாக உலகுக்குக் காண்பிக்கக் கூடிய நாடென்ற பெருமையை எமது நாடு பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகின்றது.

இது ஒருபுறமிருக்க, ஐ. தே. கவின் வருடாந்த மாநாட்டில் சு.க மற்றும் ஐ. தே. க தலைவர்கள் ஆற்றிய உரைகளில் ஒரே விதமான அம்சமே பொதிந்திருந்தது.

அரசியல் கட்சிகளிடையேயும் இனங்களுக்கிடையேயும் அவர்கள் நல்லிணக்கத்தையே வலியுறுத்தினர்.

தேசிய நல்லிணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் ஒன்று திரளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

சுதந்திரக் கட்சியினதும் ஐ. தே. க தலைவரினதும் ஒருமித்த கருத்துகள், ஒரே மேடையில் வைத்து ஒலித்திருக்கின்றன.

இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காக சு. கவினதும் ஐ. தே. கவினதும் தலைவர்கள் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட வேண்டுமென்பதே சமாதான விரும்பிகளின் விருப்பமாகும்.

அதேசமயம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக பாடுபட்ட அன்றைய தேசியத் தலைவர்களையும் இம்மாநாடு நினைவு கூர்ந்திருக்கிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகையில், சு. க. ஸ்தாபகத் தலைவரான அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் நிலைப்பாட்டை அலட்சியப்படுத்தி விட முடியாது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இப்போது கோருகின்ற சமஷ்டி தீர்வு யோசனையை முதன் முதலில் அன்று வெளியிட்டவர் அமரர் பண்டாரநாயக்க ஆவார்.

அரசியல் விரோதிகளின் சதி முயற்சி காரணமாக பண்டாரநாயக்கவின் சமஷ்டித் திட்டம் மாத்திரமன்றி, இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அத்தனை முயற்சிகளுமே அன்று குழிதோண்டிப் புதைக்கப்பட்டன.

இவ்வகையில் நோக்கும் போது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் புரிந்துகொண்ட முதலாவது சிங்களத் தலைவராகவே அமரர் பண்டாரநாயக்க தென்படுகின்றார்.

அமரர் பண்டாரநாயக்கவின் தீர்வுத் திட்டத்துடன் தமிழர் தரப்பின் இன்றைய தீர்வுக் கோரிக்கையையும் இணைத்துப் பார்ப்பது தற்போது அவசியமாகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த தனியான பிராந்தியத்துக்குள் நியாயமான அதிகாரங்கள் கொண்ட சமஷ்டித் தீர்வையே தமிழர் தரப்பு இப்போது முன்வைத்திருக்கின்றது.

எனவே வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளதை இவ்விரு கட்சிகளின் ஒருமித்த கருத்துகள் பலப்படுத்தி நிற்கின்றன.

இத்தகைய அரசியல் நல்லிணக்கக் காட்சிகளுக்கு அப்பால் இனவாத அரசியல் சக்திகளின் இன்றைய அரசியல் செயற்பாடுகளையும் இங்கு கவனத்தில் கொள்வது அவசியமாகின்றது.

சிறுபான்மை மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதை பிரிவினையாகத் திரிவுபடுத்தி சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைப்பதில் மஹிந்த அணியினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

சமாதான முயற்சிகளைப் பொறுத்த வரையில் மஹிந்த அணியினரின் செயற்பாடானது பாரிய தடைக்கல் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும் தடைகளைக் கண்டு பின்வாங்குவதால் நாட்டின் தேசியப் பிரச்சினை எக்காலமும் தீர்ந்து விடப் போவதில்லை.

தடைகளை துணிச்சலுடன் கடந்தாலேயே நாட்டில் நல்லிணக்கத்தையும், நிரந்தர அமைதியையும் தோற்றுவிக்க முடியும்.

Latest Offers

loading...

Comments