மீண்டுமொரு பொதுமன்னிப்பு வழங்குவாரா மைத்திரி?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
950Shares

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை இராணுவ முகாமில் கடந்த 1998ம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் லெப். விமல் விக்கிரமகே என்ற அதிகாரி சுட்டுக் கொன்றார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்து.

ஆனால் குறித்த சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போதே, தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டார் என விமல் விக்கிரமகேக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 2 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில் மேஜர் விமல் விக்கிரமகே இழப்பீட்டைச் செலுத்துவதற்கு உதவும் வகையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, நிதிசேகரிக்கும் பரப்புரை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ஆனால் இந்த இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கக்கூடும் என குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியிடம் மேஜர் விமல் விக்கிரமகே பொதுமன்னிப்பைக் கோரவோ, இழப்பீட்டைச் செலுத்துமாறு இராணுவத்தைக் கோரவோ இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கிறார்.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன, மேஜர் விமல் விக்கிரமகே இராணுவத்தில் பணியாற்றிய போது, சேவையில் நல்ல பதிவுகளைக் கொண்டிருந்தவர் என்று கருத்துரைத்துள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

தன்னை கொலை செய்ய முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கும், சிகிரியா ஓவியத்தின் மீது சேதம் விளைவித்தார் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட யுவதி ஒருவருக்கும் என இருவருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments