இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை தூண்டிவிட வேண்டாம் :சூடான விவாதத்தில் களமிறங்கிய மனோ

Report Print Nivetha in அரசியல்
265Shares

இனவாத பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை தூண்டிவிட முயற்சிக்க வேண்டாம். இது சகவாழ்வு காலம். நாம் இலங்கையர் என்று முதலில் சொல்லுவோம். இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை இனத்துக்கும், மொழிக்கும், மதத்துக்கு வழங்குவோம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தனியார் தொலைகாட்சி சிங்கள மொழியிலான அரசியல் விவாதத்தில் நேற்று நள்ளிரவு கலந்துகொண்ட போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இதை உங்களுக்கும், சிங்கள சகோதரர்களுக்கும் நான் சொல்கிறேன். “சிங்களவர்களே எழுந்து நில்லுங்கள்” என்று அநகாரிக தர்மபால அன்று சொன்னார் “இலங்கையர்களே எழுந்து நில்லுங்கள்” என்று இன்று நான் சொல்கிறேன். இதைதான் ஜனாதிபதியும் சொல்கிறார் எனவும் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் உதித்த தேசிய தலைவர் நெல்சன் மண்டேலா, இவர் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளையர்களை வெறுக்கவில்லை. அவர்களையும் உள்வாங்கித்தான் நாட்டை உருவாக்கினார்கள்.

அதே நாட்டின் பக்கத்து நாடான சிம்பாப்வேயில், ஆட்சிக்கு வந்த ரொபர்ட் முகாபே வெள்ளையர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.

இதனால் அந்நாடு அழிந்தது. அதுவேதான் இலங்கையிலும் நடந்தது. 1948ஆம் ஆண்டு ஆட்சி பலம் வந்தவுடன் நீங்கள் தமிழர்களை ஒதுக்கினீர்கள்.

இதனால் நாடு அழிந்தது. ஒரு காலத்தில், தென்னிலங்கை சிங்கள தலைவர்கள் வடக்கே சென்று சமஷ்டி முறைமையை முன்வைத்தார்கள்.

அப்போது தமிழ் தலைமை அதை நிராகரித்தது. அப்படி தெற்கில் இருந்து வந்த சமஷ்டி யோசனையை நிராகரித்த தமிழர்கள், பிற்காலத்தில் 180 பாகை தலைகீழாக மாறி, ஏன் தனி ஒரு நாட்டை கோரினார்கள் என்ற கேள்விக்கு விடை தேடுங்கள் இதற்கு உரிய விடை கிடைக்கும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நாட்டின் பிரதான பிரச்சினைகள் யுத்தம், பயங்கரவாதம் என அடுக்கிக்கொண்டு போகாதீர்கள். இந்த யுத்தத்திற்கு மூல காரணம் உள்ளது.

அது இனப்பிரச்சினை. அதுதான் முதல் பிரச்சினை. அதற்கு நாம் பதில் தேடுவோம். இந்த நாட்டுக்கு முதலில் வெளிநாட்டுகாரர்களை அழைத்து வந்ததும், ஐ.நா சபையில் சென்று முறையிட்டதும் தமிழர்கள் அல்ல.

அதை செய்தது மகிந்த ராஜபக்ஸ 1988 இல் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மனிதவுரிமை காவலனாக தன்னை கட்டிக்கொண்டு, துணைக்கு வாசுதேவ நாணயக்காரவையும் அழைத்துக்கொண்டு அவர் ஜெனீவா போனார். மறந்துவிட்டதா? தெற்கில் இருந்ததுதான் முதலில் சமஷ்டி கோரிக்கை வடக்குக்கு சென்றது.

பண்டாரநாயக்கவை சுட்டுகொன்று முதன் முதலில் அரசியல் படுகொலை கலாச்சாரம் தெற்கில்தான் ஆரம்பமானது, அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் கலாச்சாரம் ஜேவிபியால் 1971இல் முதன்முதலாக தெற்கில்தான் ஆரம்பமானது.

ஆகவே எல்லாவற்றுக்கும் தமிழர்களை மாத்திரம் தூற்ற வேண்டாம். இனவாத பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை தூண்டிவிட முயற்சிக்க வேண்டாம். இது சகவாழ்வு காலம். நாம் இலங்கையர் என்று முதலில் சொல்லுவோம்.

இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை இனத்துக்கும், மொழிக்கும், மதத்துக்கு வழங்குவோம். இதை உங்களுக்கும், சிங்கள சகோதரர்களுக்கும் நான் சொல்கிறேன்.

இதற்கு பதிலளித்த பொது எதிரணி எம்பி கெஹெலிய ரம்புக்கவெலவும், விமல் வீரன்வன்ச கட்சி பேச்சாளர் முஹமட் முசாமிலும், சிங்கள மக்களுக்கு தாம் உண்மையைதான் கூறுவதாகவும், உண்மையை எடுத்து கூறுவது இனவாதம் என்றால், தாம் இனவாதிகளாகவே இருக்க தயார் என்றும் பதில் கூறியுள்ளார்கள்.

மேலும், தனியார் தொலைகாட்சி சிங்கள மொழியிலான அரசியல் விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன், பொது எதிரணி எம்.பி கெஹெலிய ரம்புக்கவெல, விமல் வீரன்வன்ச கட்சி பேச்சாளர் முஹமட் முசாமில், மேல்மாகாண முதல்வர் இசுறு தேவப்பிரிய ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments