எழுக தமிழ் எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான அவசியமும்

Report Print Samy in அரசியல்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றக் கோரியும், உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றிணைந்து எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரண சுயாட்சியையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் சமஷ்டி ஆட்சி முறையான தீர்வு வேண்டுமென்றும்,

தமிழ் தேசிய இனத்தின் அடையாளத்தையும் தமிழர் தாயகத்தின் அடையாளத்தையும் சிதைத்து சீரழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டுமென்றும்,

காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம் என்பவற்றுக்கு தீர்வு வேண்டும் என்றும்,

மக்களின் பூர்வீக குடியிருப்புக்களில் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டுமெனவும்,

மீள்குடியேற்றம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும்,

இன அழிப்பு எதிர்காலத்தில் இடம்பெறாவண்ணம் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பல வருடங்களுக்குப் பின்னர் கிளர்ந்தெழுந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றனர்.

இந்த 'எழுக தமிழ்' நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்கள மக்கள் எதிர்க்கக்கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக்கூடாது. அரசியல் யாப்புக்களினால் பாதிப்படையப் போகும் மக்கள் நாங்களேயாவோம். எனவே, எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவே இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்தினோம்.

இந்தப் பேரணி யாருக்கும் எதிரானதல்ல. ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடத்தப்படும் பேரணி இதுவல்ல. நாம் மத்திய அரசை எதிர்த்து இதனை நடத்தவில்லை. சிங்கள சகோதர, சகோதரிகளையோ, பௌத்த சங்கத்தினரையோ, எதிர்த்து நாம் இதனை நடத்தவில்லை. இலங்கை தமிழரசுக்கட்சியைக் கூட நாம் எதிர்த்து இதனை நடத்தவில்லை. நாம் எமது தமிழ் பேசும் மக்களின் கரிசனைகளை, கவலைகளை ஆகக்கூடியது எமது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடத்தியுள்ளோம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

மனக்கிலேசங்களை உலகறிய உரத்துக்கூறவே நாம் இங்கு கூடியுள்ளோம். திடீரென்று ஒரு அரசியல் யாப்பை தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக்கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக்கூடாது. எமது எதிர்பார்ப்புக்களை வரப்போகும் அரசியல் யாப்பினால் திருப்திப்படுத்த முடியுமென நாம் எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல் இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றிருந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பேரணி குறித்த தமது எண்ணக்கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்பட்ட இந்த எழுக தமிழ் பேரணிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் கூட ஆதரவு நல்கியிருந்தன.

தற்போதைய நிலையில் இவ்வாறான எழுச்சிப் பேரணி அவசியமா என்ற கேள்வியும் ஒரு சாராரால் எழுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் எழுச்சிப் பேரணி நடந்தேறியிருக்கின்றது. இதன் மூலம் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் எடுத்தியம்பப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ்., செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், பேரணியில் ரெலோ கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.

இந்தப் பேரணிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. இவ்வாறு தமிழரசுக்கட்சியின் தலைமை ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகின்றது.

தற்போதைய நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைமையானது எடுத்த இந்த முடிவானது சரியானதென்றே கருதவேண்டியுள்ளது. ஏனெனில் நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அரசியல் தீர்வை காண்பதற்கும் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பாராளுமன்றத்தை அரசியல் யாப்பு சபையாக மாற்றி அரசியல் அமைப்பை மாற்றியமைப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழுவானது தற்போது அதிகாரப்பகிர்வு குறித்தும் ஆராய ஆரம்பித்துள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அக்கறை காண்பித்து வருகின்றார். இதற்கான முன்முயற்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை ஈடுபட்டு வருகின்றது.

இதேபோல், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான அழுத்தங்களையும், அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் தலைமை வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கமானது முயற்சி எடுத்து வருகின்ற போதிலும் அது மந்தகதியிலேயே நடைபெற்று வருவதை ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் மீளக்கையளிக்கும் விடயமாகட்டும் அல்லது மீள் குடியேற்றமாகட்டும் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம் ஆகியனவற்றுக்கும் உரிய தீர்வுகள் காண முயற்சிக்கப்படுகின்ற போதிலும் அதிலும் வேகம் போதாமல் உள்ளது.

இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வை காண வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தமிழரசுக்கட்சியின் தலைமை முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக பேரணியை நடத்துவது என்பது இருதரப்பிற்குமிடையில் முரண்பாடுகளை அதிகரிக்கவே செய்யும். இதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியமற்றதாக மாறிவிடும். இதனால் தான் தமிழரசுக்கட்சியின் தலைமை இந்த எழுக தமிழ் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

தற்போதைய நிலையில் தமிழரசுக்கட்சியின் இந்த முடிவினை தவறென்று கூற முடியாது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக எவ்வாறு தீர்வைப் பெறுவது என்ற விடயத்தில் தமிழ் மக்களின் தலைமை சிந்திக்கவேண்டிய நிலையிலேயே உள்ளது. இதனை உணர்ந்தே தமிழரசுக்கட்சியின் தலைமையானது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தீர்வொன்றைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் தீர்வுக்கான முயற்சிக்கு வலுசேர்ப்பதாகவே அமைந்துள்ளது.

ஏனெனில் தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் அவர்களை ஏமாற்றக்கூடிய நிலை இல்லை என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறக்கூடிய நிலையை எழுக தமிழ் பேரணி ஏற்படுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடும் தற்போதைய நிலையில் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Latest Offers

loading...

Comments