சட்டவிரோதமான முறையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக அதன் பணிப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
இந்த ரத்து தொடர்பில் நீதிமன்றின் உதவி விரைவில் நாடப்படும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க்ஸ் அலைவரிசையின் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் சட்டத்திற்கு முரண்பாடான வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊடக அமைச்சினால் கடந்த 24ம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முதல் ஊடக நிறுவனத்தின் ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டது.
ஊடக அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
ஊடக நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஏனைய குற்றச்சாட்டுக்களிலும் உண்மையில்லை.
ஊடக அமைச்சின் செயலாளரது தனிப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒளிபரப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி அலைவரிசையின் நிதி பிரச்சினைகள் தொடர்பில் வேறு நிறுவனம் விசாரணை நடத்தி வருகின்றது.
இன்னமும் விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில் தீர்மானங்கள் எதனையும் ஊடக அமைச்சு எடுக்க முடியாது என ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.