பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பேரினவாதம் பேசினால் என்னவாகும்?

Report Print Samy in அரசியல்
275Shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இக்கருத்துக்கள் குறித்து ஆராயும்போது யாரிடம் மனிதம் இருக்கிறது யாரிடம் இனவாதம் இருக்கிறது என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்.

அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி,பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் பலியானமை ஒரு சாதாரண சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இரண்டு மாணவர்களின் கொலையை சாதாரணமான விடயம் என்று கூறுகிறார் எனில், அவரிடம் இருக்கக் கூடியதான பேரினவாத சிந்தனை எத்துணை பயங்கரமானதென்பதை நாம் உணர முடியும்.

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கக்கூடிய வரிடம் எந்தளவு தூரம் கொலை ஆதரவு இருக்கிறது என்பதும் அதிலும் தமிழ் மாணவர்களின் மரணத்தை ஒரு சாதாரண விடயம் என்று கூறுமளவில் அவரிடம் இருக்கும் இனவக்கிரம் எத்துணை மோசமானது என்பதும் அறிதற்குரியது.

இங்குதான் ஓர் உண்மை உணரப்படுகிறது. அதாவது பொறுப்பான பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் பேரினவாத சிந்தனையுடையவர்களாக இருந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு ஈனம் ஏற்படுமேயன்றி வேறு எந்த ஆக்கமும் நிகழமாட்டாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது இந் நாட்டுக்கானது. இந்தநாடு எனும்போது இங்கு வாழும் அத்தனை மக்கள் சமூகத்துக்குமானது.இருந்தும் தான் ஒரு பேரினவாதம் சார்ந்தவர் போல பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்து அமைந்துள்ளது.

இத்தகைய உயர் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைகள் காரணமாகவே இன்றுவரை இந்த நாட்டில் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை.

இருந்தும் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் மேற்போந்த கருத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேன கண்டித்திருப்பது ஆறுதலைத் தருகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடயம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சொல்வதை ஏற்க முடியாது என அனைத்துப் பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மறுத்தான் கொடுத்திருப்பது,

உயர்பதவியில் இருக்கக் கூடியவர்கள் எழுந்தமானமாக இனவாதம் பேச முடியாது. அவ்வாறு பேசினால் அதைக் கண்டிப்பதற்கு நீதியின் பேரால் அமைப்புக்கள் உண்டென்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

எது எப்படியாயினும் பல்கலைக்கழக மாணவர் கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை சாதாரண விடயம் எனக்கூறிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அல்லது அவரைப் பதவியில் இருந்து விலக்குமாறு தமிழ் அரசியல் தலைமைகள் வலுவாகக் குரல் கொடுக்க வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை அநியாயமாகக் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் பொலிஸ் தலைமை தனது கவலையை வெளியிட்டிருக்கும் வேளையில், ஒரு தகாத சம்பவம் நடந்துவிட்டது என்று கூறுகின்ற நேரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அதை ஒரு சாதாரண சம்பவம் என்று கூறியமை பாரதூரமானதே.

ஆக, இதுதொடர்பில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத்தவறினால் பாதுகாப்புத் தரப்பினரும் அவர் இருக்கும் உசாரில் தம்மீது எதுவும் செய்யலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடம் ஏற்படும்.

இந்த அச்சத்தை களைவது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்.

Comments