தமது அண்மைய உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தாம் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், இந்த உரை திரிபுபடுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை பிழையாக பயன்படுத்தி தம்மீது சேறு பூசி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் படைவீரர்கள் தொடர்பிலான தமது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, என்ன விலை கொடுத்தேனும் படைவீரர்களின் நன்மதிப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை
தேசிய பாதுகாப்பின் மதிப்பை அறியாமல் சில ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும், அரசசார்பற்ற அமைப்புக்களும் செயற்படுகின்றன என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற படைவீரர் நிகழ்வுஒன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த அரச சார்பற்ற அமைப்புக்களுடன் தேசிய பாதுகாப்பு விடயத்தில் தாம் எதையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் அண்மையில் தாம் படைஅதிகாரிகள் குறித்து வெளியிட்ட கருத்தை சில ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் பிழையான கோணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்..
ஊடக சுதந்திரம் என்பதன் பின்னால் இருந்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் யார் எதனைக்கூறினாலும் படைத்தரப்பின் மீதுள்ள தமது நம்பிக்கையை எவராலும் சிதைக்கமுடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரிய அறிவில்லாதவர்கள் அது தொடர்பில் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடங்களில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது
நாட்டில் இனவாதமற்ற ஒரு சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் பிரிவினையை ஊக்குவிக்கும் சில அமைப்புக்களுக்கு இடம்தரமுடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது