பஷிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிகை

Report Print Samy in அரசியல்
60Shares

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச உள்ளிட்ட இருவருக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

50 லட்சம் பஞ்சாங்கக் கலண்டர்களை அச்சிட திவிநெகும நிதியில் 29.4 மில்லியன் ரூபா செலவிட்டமையால், அரசாங்க நிதியை மோசடி செய்ததாக, பஷில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காணப்படுவதால், மீண்டும் இது குறித்து வழக்குத் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, 2014ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதிக்கும் டிசம்பர் 31ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவின் உருவப்படம் கொண்ட கலண்டர்களை அச்சிட்டதன் மூலம் அவருக்கு ஆதரவாக பொதுமக்களை வாக்களிக்க உற்சாகப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்சவும், திவிநெகும திட்டப் பணிப்பாளர் நாயகமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

1981ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் இலக்கம் 15 பிரிவு 79 ன் பிரகாரம் இது ஓர் லஞ்சக் குற்றமாக கருதப்படுவதாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், 1982ம் ஆண்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் இல 12ன் கீழ் சந்தேக நபர்கள் இருவரும் நிதி மோசடி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரங்களில் திவிநெகும திட்ட பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்படாததால் அந்த குற்றப் பத்திரங்களை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், சந்தேக நபர்களுக்கு எதிரான புதிய வழக்கு குறிப்பிட்ட ஒப்புதல் கடிதத்துடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 32 பேர் சாட்சிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Comments